search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசிய காட்சி.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது- கே.எஸ்.அழகிரி

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டதால் நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது, எந்தவித பயனும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
    ஆத்தூர்:

    குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆத்தூரில் நேற்று கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது மக்களை திசை திருப்பவே தவிர, இந்த சட்டத்தால் நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது, எந்தவித பயனும் இல்லாத இந்த சட்டத்தை இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. அதனால் மக்கள் எதிர்ப்பு இயக்கமாக தற்போது கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.

    மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்துவிட்டு சிறுபான்மை மக்களை காப்போம் எனறு கூறி வருகின்றனர். இவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் இந்தியா வந்துள்ள ஒரு லட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்க செய்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் சட்டத்தை ஆதரித்து வாக்களித்துவிட்டு இங்கு நாடகமாடுகிறார்கள். இதனை காங்கிரஸ் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அசாம் மாநிலத்தில் எவ்வளவு பேர் உள்ளார்கள் என்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை தான் சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு சட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது.

    மத்திய - மாநில அரசுகளை ஆதரித்து கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடைபெறாது. மத்திய - மாநில அரசுகளை அதன் திட்டங்களை நடிகர் விஜய் எதிர்த்து கருத்து தெரிவித்ததால் அவர் மீது வருமான வரி சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. நடிகர் விஜய் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அனுமதிக்காது. அவர் காங்கிரசிடம் ஆதரவும் கேட்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் ஏழைகளை பாதிக்கும் என்பதால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. பாராளுமன்றத்தில் பா.ஜனதா தனது அசுர பலத்தால் சட்டத்தை நிறைவேற்றியது.

    ஆனால் மாநிலங்களவையில் குறைந்த பலத்தை கொண்டிருப்பதால் பா.ஜனதாவால் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க., பா.ம.க. எந்த நிபந்தனையும் இன்றி தங்களுடைய 12 வாக்குகளை பா.ஜனதாவுக்கு ஆதரவாக அளித்துள்ளனர்.

    பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவில் பிரிவினை உருவாக காங்கிரஸ் தான் காரணம் என்றும், இந்தியாவில் பிரிவினை ஏற்பட்டது என்றும் ஒரு பொய்யான வரலாற்று பிழையான தகவலை பேசி இருக்கிறார். பொய்யான தகவலை மோடி பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாவட்ட தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி, முன்னாள் மாவட்ட தலைவர் தேவதாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்கணேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வாழப்பாடி ராமசுகந்தன், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், ஆத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ஓசுமணி, பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் கல்லை கருப்பண்ணன், ஏ.ஆர்.எஸ். செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிமுத்து, சுந்தரம், திருஞானம், வெங்கடாஜலம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், வழக்குரை ஞருமான பெரியசாமி, அய்யாவு, சம்பத், நாட்டமை செந்தில்குமார், அணையரசு, செல்வராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×