search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களியக்காவிளை எல்லையில் வாகனங்களில் தடுப்பு மருந்து அடிக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்
    X
    களியக்காவிளை எல்லையில் வாகனங்களில் தடுப்பு மருந்து அடிக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்

    கொரோனா வைரஸ்- களியக்காவிளை எல்லையில் சிறப்பு கண்காணிப்பு மையம்

    களியக்காவிளை பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் தற்காலிக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    நாகர்கோவில்:

    சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது.

    இந்தியாவில் கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவி உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. சிகிச்சை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

    மேலும் சீனாவில் இருந்து குமரி மாவட்டம் வந்தோர் யார்- யார் ? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு நோய் பாதிப்பு இருக்கிறதா? என்பதை சுகாதார துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே குமரி மாவட்டத்திற்கு சீனாவில் இருந்து 24 பேர் வந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். வீடுகளில் அவர்கள் தனிமை படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்,

    பொது இடங்களுக்கு, விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரள எல்லையான களியக்காவிளையில் கண்காணிப்பை பலப்படுத்த மாவட்ட சுகாதார துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து களியக்காவிளை பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் தற்காலிக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் நோய் அறிகுறி உள்ளோர் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

    இதற்காக களியக்காவிளை மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ குழுவும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் வருவோரை பரிசோதித்து வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா கூறுகையில், கேரளாவின் வடக்கு பகுதியில் தான் பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இருப்பினும் நமது மாவட்டம் கேரளாவின் எல்லை பகுதியில் இருப்பதால் இங்கும் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் களியக்காவிளையில் தற்காலிக மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டம் முழுவதும் சீனாவில் இருந்து திரும்பிய 24 பேரை வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×