search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    பள்ளி, கல்லூரி விளையாட்டு போட்டிகளை கிராமப்புறங்களிலும் நடத்த வேண்டும் - கவர்னர் கிரண்பேடி

    கிராமப்புறங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் புதுவை கலை விளையாட்டு சங்கமம் என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி 2 நாட்கள் உப்பளம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    உப்பளம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கவர்னர் கிரண்பேடி விளையாட்டு கலை சங்கமத்தை தொடங்கி வைத்து கவர்னர் கிரண்பேடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வருடாந்திர விளையாட்டு போட்டிகளுக்கு புத்துயிர் அளித்ததற்காக கல்வி அமைச்சர் கமலகண்ணனுக்கும், அவரது கல்வித்துறைக்கும் மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை வருடாந்திர விளையாட்டு தினமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இருப்பினும், அதற்கு முன்னதாக மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் பிராந்தியங்களிலும், கிராமப்புறங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

    கல்வி நிறுவனங்களுக்கான விளையாட்டுக்கொள்கையை ஆவணப்படுத்த வேண்டும். விளையாட்டுப் பயிற்சியை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் இளைஞர்கள் கால்பதிப்பார்கள். இது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

    கடந்த 33 ஆண்டுகளாக புதுவை ஆண்டு விளையாட்டு போட்டிகளை தவறிவிட்டது மன்னிக்க முடியாதது. இப்போது அதை புதுப்பித்த அமைச்சர் கமலகண்ணனுக்கு நன்றி கூறுகிறேன்.

    இதுபோன்ற நிகழ்வுகளையும் நடத்துவதற்கும் விளையாட்டு உபகரணங்களை பராமரிக்கவும் ஸ்பான்சர்களை அழைக்கலாம்.

    விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ., கல்வித்துறை செயலர் அன்பரசு, போலீஸ் ஐ.ஜி. பாலாஜி ஸ்ரீவத்சவா, உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 100, 200 400, 800, 1500, 3000 ஆகிய பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஆகிய தடகள போட்டிகள் நடைபெற்றது.
    Next Story
    ×