search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- ஆயுதப்படை காவலர் சித்தாண்டி கைது

    டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    தமிழக அரசின் 41 துறைகளில் காலியாக இருந்த 1,953 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2ஏ தேர்வு நடத்தியது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நடந்த அந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 56 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் இப்போது 41 துறைகளில் பல்வேறு பணியிடங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் குரூப்-4 தேர்வில் மோசடி நடந்து இருப்பது தெரிய வந்தது. அதுபற்றி விசாரணை நடத்தியபோது குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குரூப்-2ஏ தேர்வில் 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்ததாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவு துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஞானசம்பந்தம், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன் ஆகியோர் கைதானார்கள்.

    இவர்கள் தேர்ச்சி பெற உதவி செய்ததாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் கைதானார். இவர் தனது மனைவி மகாலட்சுமியையும் முறைகேடு செய்து குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    குரூப்-4 தேர்வில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் சித்தாண்டி ஆகியோருக்கும் குரூப்-2ஏ தேர்வில் பங்களிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் குரூப்-2ஏ தேர்வு எழுதியவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

    மொத்தத்தில் குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த மோசடி தொடர்பாக இதுவரை 25 பேர் கைதாகி இருக்கிறார்கள். முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் சிக்கினால் எப்படி முறைகேடு நடந்தது? எத்தனை பேரிடம் முறைகேடு நடந்தது? என்பன போன்ற விவரங்கள் தெரிய வரும்.

    இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

    குரூப் 4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த அவர் சிவகங்கை-ராமநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள தனது தோட்டத்தில் பதுங்கியிருந்தபோது சிக்கினார்.

    ராமநாதபுரத்தில் கைது செய்த சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
    Next Story
    ×