search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாளையில் தொழில் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த 4 பேர் கும்பல் கைது

    பாளையில் தொழில் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள வண்டிகாவிளையை சேர்ந்தவர் வில்பிரின் (வயது35). இவர் அங்கு பால்பண்ணை நடத்தி வருகிறார். மேலும் ஜவுளி துணிகளும் வாங்கி மொத்த விற்பனை செய்துள்ளார்.

    தொழில் அதிபரான வில்பிரினுக்கும், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த தயாளு பிரபு (40) என்பவருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தயாளுபிரபுவின் நண்பர்களான திருதங்கலை சேர்ந்த முனீஸ்வரன் (32), சங்கரேஸ்வரன் (32), மணிகண்டன் (42), கருப்பசாமி ஆகியோரும் வில்பிரினுடன் நட்பாக பழகினார்கள்.

    அப்போது அவர்கள் தாங்கள் பெரிய தொழில் அதிபர்களிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் வில்பிரின் தனது தொழிலை அபிவிருத்தி செய்ய ரூ.1 கோடி கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தங்களுக்கு கமி‌ஷனாக ரூ.12 லட்சத்து 9 ஆயிரம் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    அந்த தொகையை வில்பிரின் 2 தவணையாக அவர்களுக்கு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து 5 பேரும் சேர்ந்து கடன் தொகையில் முதல் தவணை தொகை ரூ.25 லட்சத்தை தருவதாக கூறி, அதை பெற்றுக்கொள்ள நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு வில்பிரின் நெல்லை புதிய பஸ் நிலைய பகுதிக்கு வந்தார். அங்கு தயாளு பிரபு, முனீஸ்வரன், சங்கரேஸ் வரன், மணிகண்டன், கருப்பசாமி ஆகிய 5 பேரும் ஒரு பையுடன் வந்தனர்.

    பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தின் எதிரே உள்ள பகுதிக்கு வில்பிரினை அழைத்து சென்று, இந்த பையில் ரூ.25 லட்சம் பணம் உள்ளது. இது கருப்பு பணம் என்பதால் இங்கு வைத்து எண்ணி பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

    ஆனால் வில்பிரின் அவர்கள் முன்பே பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் பணத்திற்கு பதில் 500 ரூபாய் தாள் போன்று கருப்பு கலர் பேப்பர் இருந்துள்ளது. அந்த பேப்பரின் முனை பகுதியில் ரூ.500 என்று அச்சிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வில்பிரின், தனக்கு இந்த பணம் வேண்டாம் ஒரிஜினல் பணம் தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் இந்த கருப்பு பேப்பரை வீட்டிற்கு கொண்டு சென்று திராவகத்தில் கழுவினால் ஒரிஜினல் 500 ரூபாய் வந்து விடும் என்று கூறி விட்டு, அந்த இடத்தை விட்டு வேகமாக பஸ் நிலையம் பகுதிக்கு சென்றுள்ளனர். வில்பிரின் தனக்கு இந்த பணம் வேண்டாம் என்று அவர்களிடம் திருப்பி கொடுப்பதற்குள், அவர்கள் தலைமறைவானார்கள்.

    இதனால் அதிர்ச்சியடைந்த வில்பிரின், உடனடியாக அருகில் உள்ள பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த விபரங்களை கூறி தன்னிடம் கொடுத்த போலி ரூ.25 லட்சம் கருப்பு தாள்களையும் கொடுத்தார்.

    உடனடியாக நெல்லை மாநகர துணை கமி‌ஷனர் சரவணன் மேற்பார்வையில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியன் மற்றும் போலீசார் நெல்லை புதிய பஸ்நிலையம் பகுதிக்கு விரைந்து சென்று தப்பியோட முயன்ற முனீஸ்வரன், சங்கரேஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பஸ்சில் ஏறி வெளியூருக்கு தப்பி ஓட முயன்ற தயாளுபிரபு, மணிகண்டன் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள். மேலும் தப்பி ஓடிய கருப்பசாமி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×