search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாதவரம்-தரமணி மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடக்கம்

    மாதவரம் - தரமணி இடையே உள்ள 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகின்றன. வண்ணாரப்பேட்டை - விம்கோநகர் இடையே விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில்திட்டம் மாதவரம்- சிப்காட், மாதவரம்- சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.85 ஆயிரத்து 47 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவிற்கு நிறைவேற்றப்பட உள்ளன.

    இதற்கான மண் பரிசோதனை பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டன. இந்த பணிகள் முடிந்த பிறகு 2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் 2-ம் கட்ட திட்டத்தில் மாதவரத்தில் இருந்து தரமணி வரை 21 கி.மீ. தொலைவுக்கு சுரங்க வழித்தடம் அமைப்பதற்கான திட்டப்பணிகளை தொடங்க உள்ளனர். இதற்காக சுரங்கம் தோண்டும் 15 எந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு விரைவில் வர உள்ளன. பூமிக்கு அடியில் 2 வழித்தடங்களை அருகருகே அமைக்கும் பணிகளில் இந்த எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    மாதவரம் - தரமணி இடையே உள்ள 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் நாட்டின் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு விரைவில் கொண்டு வரப்படுகின்றன. இந்த எந்திரங்கள் மூலம் 21 கி.மீ. தொலைவுக்கு சுரங்க வழித்தடம் அமைக்கப்படும்.

    இந்த எந்திரங்கள் சுமார் 800 முதல் 900 டன் எடையும் 80 முதல் 90 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த எந்திரம் ஒன்று செங்குத்தாக நின்றால் அது 25 மாடி கொண்ட கட்டம் போல இருக்கும்.

    இந்த எந்திரங்கள் மூலம் ஒரு நாளைக்கு 5 மீட்டர் வரை தோண்டப்படும். மண்ணில் நிலைமை சவாலானதாக இருந்தால் சுரங்கம் தோண்டும் பணியின் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் சுரங்க வழித்தட பணிகளை விரைவில் முடிக்க அதிக சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் 21 கி.மீ. வழித்தட பாதையில் பல்வேறு இடங்களில் சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் நிறுத்தப்பட்டு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும். 2 ஆண்டில் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×