search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பொம்மிடி அருகே இரும்பு கம்பியால் தாக்கி பைனான்சியர் கொலை

    பொம்மிடி அருகே கூலித்தொழிலாளி மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற பைனான்சியரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வாசிகவுண்டனூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). கூலித் தொழிளாளி. இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இவர் அதேபகுதியை சேர்ந்த பைனான்சியர் குமார் (45) என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வட்டிக்கு ரூ.45 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அந்த பணத்தை ரமேஷ் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

    இதைத்தொடர்ந்து குமார் பணத்தை வட்டியுடன் முழுமையாக கொடுக்க வில்லை என்று ரமேஷிடம் கூறினார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு நடந்தது. வட்டிக்கு பணம்கொடுத்த குமார் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் ரமேஷின் வீட்டிற்கு சென்று அவரிடம் வட்டி பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது குமார் பணம் கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்துச்செல் என கூறி அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார்.

    இந்த நிலையில் குமார் நேற்று இரவு  ரமேஷ் வீட்டுக்கு இரும்பு கம்பியுடன் சென்றார். அப்போது தனது பணத்தை வட்டியுடன் இன்னும் முழுமையாக தரவில்லை எனக்கூறி குமார், ரமேஷை தகாத வார்த்தையால் திட்டினார். அப்போது அவர் கம்பியால் ரமேஷை தாக்க முயன்றார். இதனை பார்த்த ரமேஷின் மனைவி அஸ்வினி அதனை தடுக்க முயன்றார்.  பணம் திருப்பி கொடுக்கும்வரை ரமேஷின் மனைவியை என்னுடன் அனுப்புமாறு கூறி குமார் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடக்க முயன்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற குமாரிடம் இருந்து இரும்பு கம்பியை பறித்து அவருடைய தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
    குமார் காயம் அடைந்து மயங்கி கிடப்பதாக நினைத்து ரமேஷ் பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார், அங்கு அவர் நடத்த சம்பவத்தை போலீசாரிடம் கூறி குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டார்.  உடனே பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, குமார் பிணமாக கிடந்தார். 

    உடனே போலீசார் இறந்து கிடந்த குமாரின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ரமேசை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்சல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார். 

    இறந்து போன பைனான்சியர் குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பைனான்சியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×