search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
    X
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    குரூப்-4 தேர்வு மோசடி: சிவகங்கை போலீஸ்காரருக்கு தொடர்பு?

    குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக சிவகங்கை போலீஸ்காரரை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
    மதுரை:

    தமிழ்நாடு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வருடந்தோறும் பல்வேறு தேர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அரசு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்த தேர்வை எழுத லட்சக்கணக்கானோர் ஆண்டு முழுவதும் படித்து ஆயத்தமாகி வருகின்றனர். நேர்மையுடன் தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் தேர்வை எழுதி வரும் தேர்வர்கள் மத்தியில் தற்போது குரூப்-4 தேர்வு மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நாள்தோறும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வில் ராமேசுவரம், கீழக்கரையில் எழுதிய தேர்வாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முதல் 100 இடங்களை பிடித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், இடைத்தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் கைமாற்றப்பட்டு தகுதி இல்லாதவர்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு குரூப்-4 பணிக்கு தேர்வானது தெரியவந்தது.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட பள்ளி கல்வித்துறை ஊழியர் ரமேஷ் (39), எரிசக்தித்துறை ஊழியர் திருக்குமரன் (35), டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் உள்பட 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இதே கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க போலீஸ்காரர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாதுகாப்பு பணியில் இருந்தார்.

    அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் அந்த போலீஸ்காரர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இடைத்தரகராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதற்கு அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பங்கும் முக்கியமாக இருந்தது.

    இதனை பயன்படுத்தி அந்த போலீஸ்காரர் தனது மனைவி, சகோதரர், அவரது மனைவி ஆகியோருக்கு குரூப்-2 தேர்வு மூலம் தேர்ச்சி பெறச் செய்து அரசு பணி பெற்றுள்ளார்.

    இதே போல் அவரது மற்றொரு சகோதரரும் மோசடி செய்து குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்தது தெரியவந்தது. மேலும் தேர்வர்களிடம் பல லட்சம் பெற்றுக் கொண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் 50-க்கும் மேற்பட்டோரை வெற்றி பெற வைத்துள்ளார்.

    குறிப்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் குரூப்-4 தேர்வில் முதல் 100 இடங்களில் தேர்ச்சி பெற்று பணியமர்த்தப்பட்டுள்ளது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் உண்மை தன்மையை கண்டறிய போலீஸ்காரரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த போலீஸ்காரர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அவர் சிக்கிய பின்னர் தான் டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகள் யார்? என்பது தெரிய வரும்.
    Next Story
    ×