search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் வாங்கினால்தான் டீ குடிப்பேன் என்று கூறியவரை படத்தில் காணலாம்.
    X
    பணம் வாங்கினால்தான் டீ குடிப்பேன் என்று கூறியவரை படத்தில் காணலாம்.

    ஓசிக்கு டீயா.....? சூடான பெரியவர்: சமூகவலைத்தளத்தில் வைரலாகும் தகவல்

    கோவை அருகே டீக்கடைக்கு வந்த ஒரு பெரியவர் ஓசிக்கு டீ குடிப்பதில்லை என்று சூடாக கூறிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
    இடிகரை :

    கையில் காசு இல்லாவிட்டாலும், நண்பர்கள் கிடைத்தால் ஓசி டீக்கு உடன் செல்பவர்கள் உண்டு. சிலர் டீ குடிக்க போகும்போது, நண்பர்கள் வருவார்களா? என்று எதிர்பார்த்து காத்திருப்பதும் உண்டு. கையில் காசு இல்லாதவர்கள், கிராமப்புறங்களில் கடனுக்கு டீ குடிப்போர் இன்றளவும் உள்ளனர். இதற்கிடையில் டீக்கடைக்கு டீ கேட்டு பரிதாப தோற்றத்தில் வருபவர்களுக்கு கடைக்காரரே காசு வாங்காமல் டீ கொடுப்பது வழக்கம்.

    இப்படித்தான் நேற்று கோவை கவுண்டம்பாளையம் பேரூராட்சி் திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு டீ கடைக்கு, கிழிந்த சட்டை மற்றும் பேண்ட் அணிந்து பிச்சைக்காரர் போன்ற தோற்றத்தில் பெரியவர் ஒருவர் டீ குடிக்க வந்தார். அவர் கடைக்கு வந்து டீ கேட்டவுடன், அங்கிருந்தவர்கள் சற்று தள்ளி உட்கார்ந்து முகத்தை திரும்பி கொண்டனர்.

    ஆனால் கடைக்காரர் அவருக்கு டீ கொடுத்து சற்று தள்ளி உட்கார்ந்து குடிக்குமாறு கூறினார். உடனே அந்த பெரியவர் 10 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்தார். அதற்கு அவர் பணம் தர வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் பணத்தை வாங்கினால் தான் டீயை வாங்குவேன் என்று அந்த பெரியவர் கூறினார்.

    அதற்கு டீக்கடைக்காரர் பரவாயில்லை குடியுங்கள் என்றார். ஆனாலும் அந்த பெரியவர் விடாமல் ஓசி டீ எல்லாம் நான் குடிப்பது இல்லை என்று சூடாக பதில் கூறியதோடு, டீக்குரிய பத்து ரூபாயை வாங்கினால்தான் டீயை குடிப்பேன் என்று அடம் பிடித்தார்.

    இதனால் வேறுவழியின்றி டீக்கடைக்காரர் பணத்தை வாங்கினார். அதன்பிறகே அந்த பெரியவர் டீயை குடித்தார். கையில் காசு, வாயில் டீ என்கிற பாணியில் அவர் பேசியது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.

    இந்த சம்பவத்தை டீக்கடையில் இருந்த. ஒருவர் தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். அது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த பெரியவரின் செயல்பாட்டை பாராட்டியும், வரவேற்றும் சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×