search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.என்.நேரு
    X
    கே.என்.நேரு

    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு நடிகர் ரஜினி போட்டியே இல்லை- கே.என்.நேரு பேட்டி

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு நடிகர் ரஜினிகாந்த் போட்டியே இல்லை என்று தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

    திருச்சி:

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் மாநாடு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

    இதையொட்டி கேர் கல்லூரி வளாகத்தில் மாநாட்டிற்கான பந்தல் அமைப்பது, தரைத்தளம் சமன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தி.மு.க. தலைமைக்கழக முதன்மை செயலாளரும் திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

    அப்பணிகளை இன்று கே.என்.நேரு எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாநாடு பணிகள் குறித்து ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    திருச்சியில் 31-ந்தேதி நடைபெறும் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 6674 உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 500-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் தி.மு.க. முழுமையான வெற்றியை பெற்றுள்ளது. இதனால் திருச்சியை மையப்படுத்தி இந்த மாநாடு திருச்சியில் நடத்தப்படுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் மாநாடு மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது.

    இதில் பங்கேற்கும் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் எப்படி மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று எடுத்து கூறுவதுடன், தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியை பெறுவது எப்படி? என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

    இந்த மாநாட்டில் பொருளாளர் துரைமுருகன், உள்ளாட்சி பெண் தலைவர்களின் கணவர்கள், 65 மாவட்ட தி.மு.க. செயலாளர்கள், 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மற்றும் எம்.பி.க்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.

    பின்னர் நிருபர் கேட்ட கேள்விக்கு கே.என்.நேரு அளித்த பதில் வருமாறு:-

    கே:- தி.மு.க. தலைமைக் கழக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளீர்கள்? கட்சி வளர்ச்சிக்காக என்ன செய்ய போகிறீர்கள்?

    ப:- தலைவர் என்ன சொல்கிறாரோ? அதனை கேட்டு கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபடுவேன்.

    கே:- நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை பற்றி விமர்சித்துள்ளாரே?

    ப:- தலைவரே தெளிவாக பதில் சொல்லி விட்டார். ரஜினி ஒரு நடிகர் மட்டுமே. அவர் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிக்கப்பட்டும். அதன்பிறகு விமர்சனத்திற்கு பதில் அளிக்கிறோம்.

    கே:- 2021 சட்டமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலினுக்கும், ரஜினிக்கும் இடையிலான போட்டியாகத்தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்களே?

    ப:- பில்டப் கொடுக்கிறார்கள். முதலில் அவர் கட்சி ஆரம்பித்து கீழ் மட்டத்தில் கட்சியை கட்டமைத்து வரட்டும். அதன் பிறகு போட்டியா? இல்லையா? என்பதற்கு பதில் சொல்கிறேன்.

    கே:- வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., ரஜினி தலைமையில் மும்முனை போட்டி நிலவும் என கூறப்படுகிறதே?

    ப:- எத்தனை அணிகள் வந்தாலும் தி.மு.க., அ.தி. மு.க.வுக்கான களமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இதில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.

    கே:- பெரியார் வி‌ஷயத்தில் தி.மு.க. மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறதா?

    ப:- பெரியார் விவகாரத்தில் தலைவர் அவ்வப்போது சரியான பதில் கொடுத்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் வி‌ஷயத்தில் தி.மு.க. சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×