search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியானவரை படத்தில் காணலாம்
    X
    பலியானவரை படத்தில் காணலாம்

    மனைவிக்கு பெண் குழந்தை - பிரசவத்துக்கு அழைத்து வந்த கணவர் விபத்தில் பலியான பரிதாபம்

    தாராபுரத்தில் மனைவியை பிரசவத்துக்காக அழைத்து வந்த கணவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள என்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கவுதம் (29). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி மணிமேகலை (26). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதம் தான் ஆகிறது. மணிமேகலை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை பரிசோதனை செய்வதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கவுதம் காரில் அழைத்து வந்தார். இவர்களுடன் மணிமேகலையின் சித்தப்பாவும், தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பாரதீய கட்சியின் ஊடக பிரிவு செயலாளருமான கோபால்சாமி, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் வந்தனர்.

    காரை கவுதம் ஓட்டி வந்தார்.இந்த கார் குண்டடம் அருகே உள்ள மேட்டுக்கடை என்ற இடத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் பாலத்தில் வந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி தனியார் மில்லில் வேலை பார்த்து வரும் ஜெகதீஷ் என்பவரின் கார் வந்தது. எதிர்பாராத விதமாக 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

    இந்த விபத்தில் காரில் இருந்த கோபால்சாமி ரத்த காயங்களுடன் துடிதுடித்து சம்பவ இடத்திலே இறந்தார். கவுதம் பலத்த காயம் அடைந்தார். மணிமேகலைக்கு லேசான காயம் ஏற்பட்டது.அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் டாக்டர் குறித்த 2 நாட்களுக்கு முன்பே மணிமேகலைக்கு பெண் குழந்தை பிறந்தது.

    கவுதம் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

    அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க கவுதமின் பெற்றோர், மனைவி ஆகியோர் சம்மதித்தனர். தமிழ்நாடு உறுப்புகள் தான ஆணையத்தின் அனுமதியுடன் கவுதமின் இருதய வால்வு, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை உடலில் இருந்து அகற்றப்பட்டது.

    இதில் சிறுநீரகங்கள், கண்கள், தோல், எலும்பு ஆகியவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும், நுரையீரல் மற்றும் கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 9 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×