search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உமர் அப்துல்லா
    X
    உமர் அப்துல்லா

    உமர் அப்துல்லாவை இப்படி பார்ப்பது மிகுந்த கலக்கம் அளிக்கிறது - மு.க.ஸ்டாலின் டுவிட்

    சமீபத்தில் வெளியான காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லாவின் புகைப்படத்தை சுட்டிக்காடி இவரை இப்படி பார்ப்பது மிகுந்த கலக்கம் அளிப்பதாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. அம்மாநிலத்தை  ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 

    இந்த நடவடிக்கைகளின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னாள் முதல் மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

    காஷ்மீரில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் வீட்டுக்காவலில் இருந்த பல அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், தற்போதுவரை மூன்று முன்னாள் முதல் மந்திரிகளும் இந்த உத்தரவாதத்தை அளிக்காத காரணத்தால் வீட்டுக்காவலிலேயே உள்ளனர். 

    இதற்கிடையில், காஷ்மீர் முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் முதல் மந்திரியுமான உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வெளியானது. 

    6 மாதங்களுக்கு பின்னர் வெளியான முதல் புகைப்படத்தில் தாடியுடன் உமர் அப்துல்லா மிகவும் வயதானவர் போன்று தோற்றத்தில் இருந்தார். 

    மு.க.ஸ்டாலின்

    அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ''இந்த புகைப்படத்தில் என்னால் உமர் அப்துல்லாவை கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக நமது சுதந்திர நாட்டில் இதுதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரும்?’’ என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உமர் அப்துல்லாவின் பழைய புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படத்தை ஒப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அவர் வெளியிட்டுள்ள பதிவில்,''உமர் அப்துல்லாவின் தற்போதைய புகைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் கலக்கமாக உள்ளது. அதேபோல் உரிய நீதிமன்ற நடைமுறை பின்பற்றப்படாமல் வீட்டுச்சிறையில் உள்ள பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பிற காஷ்மீர் அரசியல் தலைவர்களை பற்றியும் மிகுந்த கவலையளிக்கிறது. வீட்டுச்சிறையில் உள்ள அரசியல்வாதிகளை உடனடியாக விடுதலை செய்து காஷ்மீர் அமைதியை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.   


    Next Story
    ×