search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரி
    X
    புழல் ஏரி

    புழல் ஏரி 88 சதவீதம் நிரம்பியது

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது ஏரியில் 2890 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி 88 சதவீதம் நிரம்பி இருக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

    2018-ம் ஆண்டு பருவ மழை பொய்த்ததால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கல் குவாரி நீர் மற்றும் விவசாய கிணற்று தண்ணீரை கொண்டு நிலைமை சமாளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி உள்பட 4 ஏரிகளும் பாதி அளவே நிரம்பின.

    இதற்கிடையே கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த செப்டம்பர் 25-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் செப்டம்பர் 28-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது.

    கிருஷ்ணா நீர்

    கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதைத் தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டது.

    கிருஷ்ணா நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது டிசம்பர் 29-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனால் புழல் ஏரிக்கு தொடர்ந்து கிருஷ்ணா நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதனால் புழல் ஏரியில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஏரிக்கு 320 கனஅடி கிருஷ்ணா நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் புழல் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது ஏரியில் 2890 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி 88 சதவீதம் நிரம்பி இருக்கிறது.

    இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் ஏரிகளும் பாதி அளவு நிரம்பி உள்ளன. பூண்டி ஏரியில் 1497 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3237 மி.கனஅடி), செம்பரம்பாக்கம் ஏரியில் 1605 மி.கனஅடி (3645 மி.கனஅடி) தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஏரிகளையும் சேர்த்து வெறும் 1,112 மி. கனஅடி தண்ணீர் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 6,064 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    எனவே இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஆந்திர மாநிலத்தில் உள்ள சோமசீலா, ஸ்ரீசைலம், கண்டலேறு அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதிவரை கிருஷ்ணா நீர் பூண்டி ஓரிக்கு அனுப்பப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×