search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜன் செல்லப்பா எம்எல்ஏ
    X
    ராஜன் செல்லப்பா எம்எல்ஏ

    திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி ஆகிவிட்டது: ராஜன் செல்லப்பா பேச்சு

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    மதுரை:

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர். அவர் போல வள்ளல் குணம் படைத்தவர் யாரும் இருக்க முடியாது.

    தமிழக மக்கள் மீது அளவற்ற பாசம் வைத்த எம்.ஜி.ஆர். எண்ணற்ற சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தார்.

    இந்த திட்டங்கள் அனைத்தும் சாகாவரம் பெற்று மக்களுக்கு பலன் அளித்து வருகிறது.

    எம்.ஜி.ஆர். அரசியலில் இருந்த வரை அவரை எதிர்க்க யாரும் இல்லை. அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை 1972-ம் ஆண்டு தொடங்கிய எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக வழி நடத்தினார். இதனால் இன்றைக்கும் அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்து வருகிறது.

    எம்.ஜி.ஆர். புகழை பேசினால் மட்டும் போதும். அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். அந்த அளவுக்கு சாதனை திட்டங்களை தந்தவர் எம்.ஜி.ஆர்.

    புரட்சித்தலைவி அம்மாவும் தமிழகத்தையும், கட்சியையும் வலிவோடும், பொலிவோடும் நடத்தினார். இன்றைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அரசின் திட்டங்கள், சலுகைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்து வருகிறது. நடத்தி முடிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விட்டது.

    காங்கிரஸ் குறித்து தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் சொன்ன கருத்துக்கள் குறித்து அவர் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. ஆனால் எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என்கிறார்கள்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது உடைந்து போன கண்ணாடி, இனி அதனை ஒட்டவைக்க முடியாது. இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜேந்திரன், அம்பலம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், சந்திரன், பன்னீர்செல்வம், பூமிபாலன், சின்னப்பாண்டி, தனிக்கொடி, பெருமாள், செல்லக்கண்ணு, கருத்த கண்ணன், பாலமுருகன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×