search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அதிக விலைக்கு பீர் விற்பனை - பார் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அபராதம்

    நெல்லையில் அதிக விலைக்கு பீர் விற்பனை செய்தது குறித்து பார் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    நெல்லை:

    நெல்லை சிந்துபூந்துறையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கடந்த 8.10.2017 அன்று சந்திப்பில் உள்ள ஒரு மதுபான கடைக்கு பீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது பீர் பாட்டிலின் விலை ரூ.120ஆக இருந்தது. இதையடுத்து வெங்கடேஷ் 2 பீர்பாட்டில் வாங்கினார். அதற்கு ரூ.240 கொடுத்தார்.

    ஆனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் ரூ.481-ஐ அவரிடம் இருந்து வசூல் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மதுபான கடை மேலாளரிடம் இது குறித்து தெரிவித்து கூடுதலாக வசூல் செய்த ரூ.241- ஐயும் தான் குடித்த அந்த பீர் பாட்டிலையும் திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் மேலாளர் இதற்கு செவிசாய்க்கவில்லை.

    இதனால் வெங்கடேஷ் மன உளைச்சல் அடைந்தார். பின்பு இது தொடர்பாக அவர் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் வக்கீல் பிரம்மா ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் மாவட்ட நீதிபதி தேவதாஸ் மற்றும் உறுபினர்கள் சிவமூர்த்தி, முத்துலெட்சுமி ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் வெங்கடேசிடம் கூடுதலாக வசூல் செய்த ரூ.241-ஐ உடனடியாக திருப்பி வழங்க உத்தரவிட்டனர்.

    மேலும் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.15,241-ஐ பார் உரிமையாளர், மதுக்கடை மேலாளர், உதவி ஆணையர் (கலால் பிரிவு) ஆகிய 3 பேரும் சேர்ந்து வெங்கடேசுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

    இந்த அபராத தொகையை ஒரு மாத காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், இல்லையெனில் 6 சதவீதம் வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
    Next Story
    ×