search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை முயற்சி நடந்த ஸ்டேட் வங்கி - கொள்ளையர்கள் பயன்படுத்திய கயிறு எரிந்து கிடக்கும் காட்சி
    X
    கொள்ளை முயற்சி நடந்த ஸ்டேட் வங்கி - கொள்ளையர்கள் பயன்படுத்திய கயிறு எரிந்து கிடக்கும் காட்சி

    ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி- மர்ம கும்பல் தப்பி ஓட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஸ்டேட் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள், ஜன்னல் கம்பியை வெல்டிங் வைத்து உடைக்க முயன்றபோது தீப்பிடித்து எரிந்ததால் கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்டு தப்பி ஓடினர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி பஸ் நிலையம் அருகே ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கி அருகிலேயே ஏ.டி.எம். மையமும் உள்ளது.

    வங்கிக்கு பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. பி.எஸ்.என்.எல். டவரும் அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். நேற்று ஊழியர்கள் வேலை முடிந்து வங்கியை பூட்டிச் சென்றனர்.

    நள்ளிரவு கொள்ளையர்கள் வங்கி கட்டிடத்தின் பின்புறம் கயிறு மூலம் சுவரின் மீது ஏறி மொட்டை மாடியில் இறங்கினார்கள். படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வங்கியின் கழிப்பறை அருகே இருந்த ஜன்னலை கடப்பாறையால் பெயர்க்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இதனால் சிலிண்டரை வங்கியின் பின்புறம் தரை பகுதியில் வைத்து அந்த சிலிண்டரில் இருந்து டியூப் மூலம் கியாஸ் எடுத்து வெல்டிங் எந்திரம் மூலம் ஜன்னல் கம்பியில் வெல்டிங் வைத்து அதை உடைக்க முயற்சித்தனர்.

    கொள்ளையர்கள் பயன்படுத்திய கயிறு

    அப்போது தீப்பொறி பட்டு தரையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பேப்பரில் தீப்பிடித்தது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அவர்கள் கொண்டு வந்த கயிறிலும் தீப்பிடித்தது. கியாஸ் சிலிண்டரில் இருந்து வரும் ரப்பர் டியூப்பிலும் தீப்பிடித்தது. இதனால் கொள்ளையர்கள் கீழே நின்றிருந்த மற்றொரு கொள்ளையனிடம் கியாஸை நிறுத்த சொன்னார்கள். உடனடியாக கியாஸ் நிறுத்தப்பட்டது. ஜன்னலை உடைக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு வேறொரு கயிறு மூலம் கீழே இறங்கினார்கள். அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்று அதிகாலை வங்கி அருகே டீக்கடை வைத்திருப்பவர் வந்து பார்த்தபோது வங்கி கட்டிடத்தில் இருந்து புகை வந்ததை கண்டு வங்கி மேலாளருக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து வங்கியை பார்வையிட்டனர்.

    புகை வந்த இடத்தில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. போலீசார் கியாஸ் சிலிண்டரையும் கொள்ளையர்கள் பயன்படுத்திய கடப்பாரை மற்றும் கயிறையும் கைப்பற்றினார்கள்.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் வந்தது. கியாஸ் சிலிண்டரை கொண்டு வந்த கொள்ளையர்கள் நின்ற இடத்தில் கேமரா எதுவும் இல்லை. வங்கி கட்டிடத்தின் முன் பகுதியிலும் வங்கிக்குள்ளும் தான் கேமரா உள்ளது. வங்கியின் பின்புறம் புதர்கள் இருந்ததால் கொள்ளையர்கள் எளிதாக வந்து அங்கு நின்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் 4 பேர் வரை இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. உள்ளூர் ஆட்களா? வடமாநில கொள்ளையர்களா? என்று விசாரணை நடக்கிறது.
    Next Story
    ×