search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம்.
    X
    சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம்.

    சென்ட்ரல் அருகே 30 அடுக்கு மாடியில் நவீன வணிக வளாகம்

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலைய வளாக பகுதியில் 30 அடுக்குமாடி கொண்ட வணிக வளாகம் அமைகிறது. பயணிகள் பொழுதுபோக்கும் வகையில் இந்த வளாகம் பல்வேறு வசதிகளுடன் நிறுவப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ரெயில் நிலையங்களை ஒட்டி உள்ள பகுதிகளை வர்த்தக ரீதியாக மாற்ற மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சென்ட்ரல், ஷெனாய்நகர், கிண்டி கத்திப்பாரா ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை செய்து பொதுமக்களை கவருவதற்கான வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 இடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்காக மட்டுமல்ல பொழுதுபோக்குவதற்காக வரவேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்படுகிறது.

    வாகனம் நிறுத்துமிடம், ஓட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் கொண்டதாக அமையும். இந்த வளாகத்திற்கு அனைத்து வகையான போக்குவரத்து வாகனங்களும் வந்து செல்லக்கூடிய வகையில் வசதி செய்யப்படுகிறது.

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலைய வளாக பகுதியில் 30 அடுக்குமாடி கொண்ட வணிக வளாகம் அமைகிறது. பயணிகள் பொழுதுபோக்கும் வகையில் இந்த வளாகம் பல்வேறு வசதிகளுடன் நிறுவப்படுகிறது.

    அடுத்த வாரத்தில் அந்த பகுதியில் அழகிய புல்தரை, செடிகளுடன் இயற்கையான சூழலை உருவாக்கிறார்கள்.

    இது 6 மாதத்தில் பசுமையான புல்வெளியாக மாறக்கூடும். மேலும் பூமிக்கு அடியில் அமைக்கப்படும் பார்க்கிங் இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    3 அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் 800 கார்கள் பார்க்கிங் செய்யக்கூடிய வசதி உள்ளது.

    மேலும் பாதசாரிகள் பூந்தமல்லி சாலையை கடக்க 2 சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது. விக்டோரியா ஹால் மற்றும் ரிப்பன் மாளிகைக்கு முன்பாக அழகிய புல்வெளியும் நீர் வீழ்ச்சியும் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் பூமிக்கு அடியில் 2 அடுக்கு பொழுதுபோக்கு மையம் கட்டப்படுகிறது. திரு.வி.க. நகர் பூங்காவுக்கு அடியில் அமையும் இந்த மையத்தில் பொதுமக்கள் குடும்பமாக வந்து நேரத்தை செலவிடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். மேலும் அங்கு வாகனங்கள் நிறுத்த பிரமாண்ட பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது.

    பூமிக்கு அடியில் 600 கார், 100 மோட்டார் சைக்கிள்கள் ஒரே நேரத்தில் பார்க்கிங் செய்யும் அளவிற்கு இவை கட்டப்பட்டு வருகிறது.

    ஷாப்பிங் பகுதிகளும், ஓட்டல்களும் அதில் இடம்பெறும். இந்த பணி மார்ச் 2021-ல் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் சர்வதேச அளவில் பல்வேறு வசதிகளுடன் பூங்கா, பார்க்கிங் வசதி, விளையாட்டு மைதானம், திறந்த வெளி திரையரங்கு, ஓட்டல், ஷாப்பிங் பொழுது போக்கு அம்சங்கள் அமைகின்றன.

    ஆலந்தூர், கிண்டி மெட்ரோ ரெயில் நிலையங்களையும், கிண்டி புறநகர் ரெயில் நிலையம் மற்றும் கிண்டி, ஆலந்தூர் பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் கட்டப்படும் பார்க்கிங் இன்னும் ஒரு வருடத்தில் தயாராகிவிடும். 30 அடுக்கு மாடி வணிக வளாகம் சென்னையின் அடையாளமாக அமையும் சென்ட்ரல் ரெயில் நிலையம், அரசு மருத்துவவனை, மெட்ரோ ரெயில், ரிப்பன் மாளிகை ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த அடுக்குமாடி வணிக வளாகம் திகழும்.

    சென்னையில் 3 முக்கிய பகுதிகளிலும் நடைபெறும் இந்த சிறப்பு திட்டங்கள் மூலம் ரெயில் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெறலாம். அந்த வகையில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பஸ், ரெயில், மெட்ரோ ரெயில் பயணிகளை ஒருங்கிணைக்கிற மையமாக இந்த வணிக வளாகங்களும் பொழுது போக்கு மையங்களும் அமைகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×