search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் பரிசு பெற்ற ரஞ்சித்குமாருக்கு 4 பசு மாடுகள் பரிசாக வழங்கப்பட்டன
    X
    முதல் பரிசு பெற்ற ரஞ்சித்குமாருக்கு 4 பசு மாடுகள் பரிசாக வழங்கப்பட்டன

    10 வருட பயிற்சியால் முதல் பரிசை வென்றுள்ளேன் - ரஞ்சித்குமார்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் முதல் பரிசை வென்றார். 10 வருட பயிற்சியால் முதல் பரிசை வென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
    அலங்காநல்லூர்:

    அலங்காநல்லூர்... என்றாலே ஜல்லிக்கட்டுதான் நினைவுக்கு வரும். உலகப் புகழ்மிக்க ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பாண்டிகை அன்று தொடங்கியது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். 14 காளைகளை அடக் கிய வீரர் விஜய் முதல் பரிசு பெற்றார்.

    மறுநாள் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. இதிலும் வீரர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். இதில் 16 காளைகளை அடக்கிய வீரர் பிரபாகரன் முதல் பரிசை பெற்றார். அவரது வீரத்துக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.

    அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளுக்கு முத்தாய்ப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று காலை 7.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் 688 காளைகள் களம் இறங்கின.

    இந்த காளைகளை 921 வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்களை காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசி பந்தாடின. அதையும் பொருட்படுத்தாமல் காளைகளை அடக்கினர்.

    இந்த நிலையில் போட்டி முடிய ஒரு மணி நேரமே இருந்த நிலையில் அதாவது இறுதிச்சுற்றில் வீரர்கள் களமிறக்கப்பட்டனர். எப்படியாவது முதல் பரிசை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் வீரர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.

    அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது23) என்ற வீரர் மிகவும் ஆக்ரோ‌ஷமாக காளைகளை அடக்கினார். சுமார் ஒரு மணி நேரத்தில் 16 காளைகளை அடக்கி வெற்றி மகுடத்தை தனதாக்கி கொண்டார். அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்படுகிறது.

    வெற்றிக்களிப்பில் திளைத்துக் கொண்டிருந்த ரஞ்சித்குமார் “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

    எனது தந்தை அவரது இளம் வயதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று காளைகளை அடக்கி பரிசு பெற்றுள்ளார். எனவே வீரம் என்பது எனது ரத்தத்தில் கலந்த ஒன்றாக உள்ளது. இது ஆண்டவன் எனக்கு கொடுத்த வரம்.

    நாமும் ஒரு நாள் கண்டிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று முனைப்போடு களத்தில் இறங்கினேன்.

    எனக்கு 14 வயது ஆனபோது காளைகளை அடக்க களத்தில் இறங்கினேன். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் களத்தில் இறங்கி காளைகளை அடக்கி சிறுசிறு பரிசுகளை பெற்று வந்தேன்.

    10 வருட பயிற்சிக்கும், எனது விடாமுயற்சிக்கும் பரிசாக இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்றுள்ளேன். அதற்கு பரிசாக எனக்கு கார் வழங்கப்படுகிறது.

    ஜல்லிக்கட்டின்போது பலவிதமான காளைகள் அவிழ்த்து விடப்படும். ஒவ்வொரு காளையும் ஒவ்வொருவிதமாக சீறிப்பாயும். காளையின் கொம்பு, உருவ அமைப்பு ஆகியவற்றை வைத்து இந்த காளையை எப்படி அடக்க வேண்டும் என்பதை கன நேரத்தில் கணித்து அவற்றை அடக்க வேண்டும். துல்லியமாக கணித்தால்தான் பரிசை வெல்ல முடிந்தது என்றார் ரஞ்சித்குமார்.

    கடந்த ஆண்டு இவரது சகோதரர் ராம்குமார் 23 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கதாகும். பாலிடெக்னிக் முடித்துள்ள ரஞ்சித்குமார் அதற்குரிய வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளார். அரசு கருணை காட்டுமா? என்ற ஆவலில் உள்ளார்.

    இந்த போட்டியில் 14 காளைகளை அடக்கிய கார்த்திக் (24) 2-வது பரிசு பெற்றுள்ளார். அலங்காநல்லூர் அருகே உள்ள ஆயத்தம்பட்டியைச் சேர்ந்த இவர் பரிசு பெற்றது குறித்து கூறும்போது, கடந்த 5 வருடமாக களத்தில் இறங்கி காளைகளை அடக்கி வருகிறேன். இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி 2-வது பரிசு பெற்றது சந்தோ‌ஷமாக உள்ளது. இருப்பினும் முதல் பரிசு கிடைக்கவில்லையே என்பது சற்று ஆதங்கமாகத்தான் உள்ளது என்றார்.

    16-ந்தேதி பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கினார் மதுரை மாவட்டம் பொதும்பைச் சேர்ந்த வாலிபர் பிரபாகரன். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

    முதல் பரிசு பெற்றது குறித்து பிரபாகரன் கூறும்போது, 9-ம் வகுப்பு வரை படித்துள்ள நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனக்கு இன்னும் திருணம் ஆகவில்லை. 18 வயதில் இருந்தே ஜல்லிக்கட்டில் பங்கேற்க தொடங்கிய நான் இந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசு பெற்றுள்ளேன்.

    பாலமேடு அல்லது அலங்காநல்லூரில் சாதனை படைத்த பின்னர்தான் எனக்கு திருமணம் என்பதில் உறுதியாக இருந்தேன். பாலமேட்டில் சாதனை படைத்த நான் இந்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளேன் என்றார்.

    பாலமேட்டில் காளைகளை அடக்கிய பிரபாகரன் நேற்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்றார். அப்போது அவருக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    Next Story
    ×