search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பொங்கல் பண்டிகை நெரிசலில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் 5 ஆயிரம் பேர் ஓசி பயணம்

    பொங்கல் பண்டிகை தினத்தில் டிக்கெட் எடுக்காமல் மின்சார ரெயில்களிலும், எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் ஓசிப் பயணம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    சென்னை:

    மின்சார ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபட்டு அபராதம் செலுத்தும் சம்பவம் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதிலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓசிப் பயணம் செய்வோர் அதிகரித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் டிக்கெட் எடுக்காமல் மின்சார ரெயில்களிலும், எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் ஓசிப் பயணம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் கடந்த 14-ந்தேதி மட்டும் 2,329 பேர் டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் செய்து பிடிபட்டனர். இதன் மூலம் ரூ.8 லட்சத்து 89 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஓசிப் பயணம் செய்து பிடிபட்டோரின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும்.

    13-ந்தேதி 2,281 பேர் ஓசிப் பயணம் செய்து பிடிபட்டுள்ளனர். மின்சார ரெயிலில்தான் அதிகம் பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து அபராதம் செலுத்தி உள்ளனர்.

    முன்பதிவு செய்யப்படாத பயண டிக்கெட்டை வைத்து ரிசர்வே‌ஷன் பெட்டியில் பயணம் செய்து பிடிபட்டதால் மூன்றில் ஒரு பங்கு அபராதம் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே வணிகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மின்சார ரெயில்களில் திடீர் திடீரென டிக்கெட் பரிசோதனை நடத்தப்படும். பண்டிகை காலங்களில் சிலர் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க சோம்பல் பட்டு ஓசிப் பயணம் செய்து பிடிபடுகிறார்கள்.

    பொதுவாக முன்பதிவு செய்யப்படாத பயண டிக்கெட் மூலம் ரிசர்வே‌ஷன் பெட்டிகளில் பயணம் செய்து பிடிபடுவோர்கள்தான் அதிகம். பண்டிகை நேரத்தில்தான் அதிக அளவு ஓசிப் பயணம் செய்கிறார்கள். கூட்ட நெரிசல் பயன்படுத்தி அதிகளவு பயணிக்கிறார்கள்.

    இந்த ஆண்டு பொங்கல், தீபாவளி பண்டிகையின் போதுதான் அதிகளவு ஓசிப் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து இரவில் புறப்படுகிற 10 ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் 3 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும்.

    ஆனால் அதைவிட அதிகளவு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் விற்பனை ஆகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டு டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து அபராதம் விதிக்கப்பட்ட விவரம் வருமாறு:-

    ஆகஸ்டு மாதம் 34,486 பேரும், அக்டோபர் மாதம் 44,166 பேரும், டிசம்பர் மாதம் 38,345 பேரும், ஜனவரி மாதம் 15-ந்தேதி வரையில் 23, 290 பேரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து அபராதத் தொகை செலுத்தி உள்ளனர்.
    Next Story
    ×