search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட சமீம், தவ்பீக்
    X
    கைது செய்யப்பட்ட சமீம், தவ்பீக்

    எஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்?- குற்றவாளிகள் வாக்குமூலம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவரும், கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    வில்சனை சுட்டுக் கொன்றதாக அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்தனர். இன்று அதிகாலை அவர்கள் இருவரும் குமரி மாவட்டம் அழைத்து வரப்பட்டனர்.

    தக்கலையில் உள்ள ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 பேர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். இவர்களை கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இருந்து சிலர் அழைத்துச் சென்றனர். அவர்களில் சிலருடன் அப்துல் சமீம், தவுபீக்குக்கு தொடர்பு இருந்துள்ளது.

    ஐ.எஸ். அமைப்பில் மேலும் பலரை சேர்க்க இவர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக கேரளாவில் ஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில்தான் தமிழக கியூ பிரிவு போலீசார் டெல்லியில் காஜா மொய்தீன், செய்யது அலி நவாஷ், மெகபூப் பாஷா ஆகியோரை கைது செய்தனர். ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    டெல்லியில் கைதான செய்யது அலி நவாஷ் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், கைது செய்யப்பட்டது அப்துல் சமீம், தவுபீக்குக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எஸ்ஐ வில்சன்

    கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர்களுக்கு பாடம் புகட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்றதாக கியூ பிரிவு போலீசாரிடம் அப்துல் சமீமும், தவுபிக்கும் தெரிவித்துள்ளனர்.

    அப்துல் சமீம், தவுபீக் இருவரும் தப்பிச் சென்றபோது கையில் ஒரு மர்ம பை இருந்தது கண்காணிப்பு கேமராவில் தெரிந்தது. அந்த பையில் துப்பாக்கி இருந்ததா? அல்லது வெடிகுண்டுகள் வைத்திருந்தார்களா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டினார்களா? என்பது பற்றியும் கியூ பிரிவு போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×