search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தப்பட்ட கவுன்சிலர் பூங்கொடி
    X
    கடத்தப்பட்ட கவுன்சிலர் பூங்கொடி

    4 மாத குழந்தை- தாயுடன் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல்

    சென்னை ஐகோர்ட்டில் 4 மாத குழந்தை, தாயுடன் கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலரை மீட்க கோரி ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி. திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது நான்கு மாத குழந்தை நிஷாந்த்.

    உள்ளாட்சி தேர்தலில் திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் பூங்கொடி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருத்தணி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 11-ந் தேதி நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கவுன்சிலர் பூங்கொடி அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் கடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து பூங்கொடியின் கணவர் கோட்டி கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், மாயமான பூங்கொடி உள்பட 3 பேரும் இன்னும் மீட்கப்படவில்லை.

    இதையடுத்து கோட்டி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடத்தப்பட்ட மனைவி பூங்கொடி, மகன் நிஷாந்த், மாமியார் வசந்தி ஆகியோரை மீட்க வேண்டும் என்று கூறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக கோட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளூர் எம்.பி. நகரில் உள்ள உறவினர் வீட்டில் மனைவி பூங்கொடி, மகன் நிஷாந்தை தங்க வைத்து இருந்தேன். கடந்த 9-ந் தேதி திருத்தணி பைபாஸ் சாலையில் வசிக்கும் ஜோதி நாயுடு என்பவர் நான் அழைத்து வரச் சொன்னதாக கூறி மனைவி பூங்கொடி, மாமியார் வசந்தி ஆகியோரை கைக்குழந்தை நிஷாந்துடன் கடத்தி சென்று விட்டார்.

    இதுபற்றி ஜோதி நாயுடுவிடம் கேட்ட போது என்னை மிரட்டினார். எனது மனைவி உள்பட 3 பேரையும் திருப்பதி திருச்சானூரில் மிரட்டி வைத்துள்ளதாக தெரிகிறது.

    கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×