search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்
    X
    சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்

    சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: நெல்லை-தென்காசியில் 15 பேரிடம் விசாரணை

    சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை-தென்காசியில் 15 பேரிடம் தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (வயது32), தவ்பீக் (28) என்ற 2 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு, கியூ பிரிவு, தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் என பல்வேறு பிரிவினர்கள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதில் பழைய குற்றவாளிகள், அவர்களுடைய செல்போனில் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர்கள் என்று புலனாய்வு பிரிவினர் ஒரு பட்டியல் தயார் செய்து அதன் அடிப்படையில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை-தென்காசி மாவட்டங்களில் மட்டும் இந்த அடிப்படையில் இதுவரை 15 பேர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலப்பாளையத்தில் குமார் பாண்டியன் கொலையில் தொடர்புடைய நாகூர் ஹனீபா (39), நவ்ஷாத் (33) உள்பட 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. நெல்லை பேட்டையில் அல்கமீர் (28) என்ற சீட் கவர் தைக்கும் தொழிலாளியை தேடி வந்தனர் அவரை அவரது உறவினர்கள் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரை தென்காசி அழைத்து சென்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வி.கே.புரத்தில் அக்பர் அலி (33) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல பத்தமடையை சேர்ந்த 2 பேர்களிடமும் தென்காசியில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. தென்காசியில் நவாஸ் உள்பட 5 பேரையும், செங்கோட்டையில் செய்யது அலி உள்பட 3 பேரையும் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிடிபட்ட 15 பேரிடமும் தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது செல்போன் எண்கள், அவர்களிடம் சமீபத்தில் யார் யாரெல்லாம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அடிக்கடி கேரளா சென்று வருகிறார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட சிலரை தேவைப்பட்டால் கூப்பிடும்போது வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் இன்று விடுவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுவரை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் நேரடி தொடர்பில் உள்ள ஒருவரும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பாபநாசம், குற்றால மலைப்பகுதிகளில் அடிக்கடி நண்பர்களுடன் சென்று சந்தேகப்படும்படி தங்கி இருந்து குளித்து வருபவர்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மேலப்பாளையம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×