search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய ஏ.சி. பஸ்சை தலைமை செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    புதிய ஏ.சி. பஸ்சை தலைமை செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்ட போது எடுத்த படம்.

    சென்னையில் குறைந்த கட்டணத்தில் 48 ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகிறது

    சென்னையில் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு 48 ஏ.சி. பஸ்கள் ஓரிரு நாட்களில் இயக்கப்படுகிறது.
    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 5 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு படிப்படியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

    பழைய, மிகவும் மோசமான நிலையில் ஓடிய பஸ்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய பஸ்கள் விடப்படுகிறது. புதிய பஸ்களில் சொகுசு இருக்கைகளும், படுக்கை வசதி, குளிர்சாதன வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளன.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு சிகப்பு நிற பஸ்கள் புதிதாக விடப்பட்டுள்ளது. புதிதாக 100 ஏ.சி. பஸ்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முதல் கட்டமாக 48 ஏ.சி. பஸ்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன. புதிய ஏ.சி. பஸ்சை தலைமை செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது புதிய ஏ.சி. பஸ் சிறப்பாக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் 48 ஏ.சி. சொகுசு பஸ்கள் ஓரிரு நாட்களில் இயக்கப்படும்.

    இந்த பஸ்களில் ஏழை- எளிய மக்களும் பயணம் செய்யும் வகையில் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்படும்.

    இந்த பஸ்சில் 40 பேர் அமர்ந்தும் 20 பேர் நின்றும் பயணம் செய்யலாம். முக்கிய வழித்தடங்களில் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படும்’ என்றார்.

    இந்த நிலையில் ஏ.சி. சொகுசு பஸ் இன்று முதல் இயக்கப்படுகிறது. 2 வழித்தடங்களில் முதலாவதாக இயக்கப்பட்டது. கோயம்பேடு - சிறுசேரி (தடம் எண். 570), தாம்பரம் - திருவான்மியூர் (தடம் எண்.91) ஆகிய இரு வழித்தடத்தில் ஏ.சி. பஸ்கள் ஓடுகின்றன.

    இந்த பஸ்சில் குறைந்த பட்ச கட்டணம் ரூ. 15. சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வால்வோ ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது அதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 28 வசூலிக்கப்பட்டது. ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் நீண்ட தூர நகர பகுதிகளுக்கு ஏ.சி. பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×