search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் வாட்ஸ் அப் குரூப் தொடங்கி கஞ்சா விற்பனை- பெண் உள்பட 3 பேர் கைது

    திருப்பூரில் வாட்ஸ் அப் குரூப் தொடங்கி கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரி பாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அனுப்பர் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த மித்லேஷ் சவுத்ரி (25), அவருடைய மனைவி ரூபாதாஸ் (21) மற்றும் பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் (21) என்பது தெரிய வந்தது.

    விசாரணையில் பீகாரில் இருந்து ரெயில் மூலமாக கஞ்சாவை திருப்பூர் கொண்டு வந்து வீட்டில் பதுக்கி வைத்து பின்னர் வாடிக்கையாளர்களை செல்போன் மூலமாகவும் வாட்ஸ்-அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு பஸ் நிலையம், சந்தை மற்றும் முக்கிய பகுதிகளுக்கு வரவழைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.500-ஐ பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×