search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாதவரம்-தரமணி இடையே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி ஜூன் மாதம் தொடங்கும்

    மாதவரம் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூன் மாதம் தொடங்குகிறது. இதற்காக பெரிய அளவிலான போரிங் எந்திரங்கள் சென்னைக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றன.
    சென்னை:

    சென்னை நகரில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    இதில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவாக்க பணிகள் நடக்கிறது.

    2-ம் கட்ட மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர் உள்பட 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு ரூ. 85 ஆயிரத்து 47 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறு கிறது. இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ. தொலைவுக்காக மெட்ரோ ரெயில் திட்டத்தில் கட்டுமான பணிக்காக டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    2 மாதங்களுக்குள் காண்டிராக்டர்கள் இறுதி செய்யப்படுவார்கள். அதன் பிறகு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கப்படுகிறது.

    இதில் ஜூன் மாதம் மாதவரம் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்குகிறது. மாதவரத்தில் இருந்து கெல்லீஸ் வரை 9 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வழித்தடத்திலும், கெல்லீசில் இருந்து தரமணி வரை 12 கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு வழித்தடத்திலும் சுரங்கப் பாதை பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது.

    இதற்காக பெரிய அளவிலான போரிங் எந்திரங்கள் சென்னைக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றன.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணியில் 52 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜப்பானின் சர்வதேச கார்ப்பரேசன் ஏஜென்சி நிதி உதவி வழங்குகிறது.

    டெண்டர் விடுவதற்கு முன்பாக ஜப்பான் நிறுவனத்தின் அனுமதியை பெற வேண்டியிருந்தது. சமீபத்தில் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து அனுமதியை பெற்றதையடுத்து டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு மத்தியில் பணிகள் தொடங்கும்.

    இப்பணிகளை விரைவுப்படுத்தி முன் கூட்டியே முடித்து விடுவோம் என்று நம்புகிறோம் என்றார்.
    Next Story
    ×