search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக கவுன்சிலர்கள் கடத்தல்
    X
    திமுக கவுன்சிலர்கள் கடத்தல்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 2 பேர் கடத்தல்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 2 பேர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் சரி சமமான வெற்றியை பெற்றிருப்பதால் யூனியன் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளை கைப்பற்ற பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சுயேட்சை மற்றும் சிறிய கட்சி உறுப்பினர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மேலும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் விலைபோகாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் 8-வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றவர் வாசுகி. இவர் கடந்த 3-ந்தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் சின்னமலை சாயல்குடி போலீசில் புகார் அளித்தார். அதில், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், தனது மனைவி வாசுகியை கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பதவி ஏற்பு விழாவுக்கு வாசுகி திடீரென வந்தார். அவர் யூனியன் கவுன்சிலராக பதவி ஏற்றுவிட்டு வெளியே வந்ததும் போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வாசுகி அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் துணை சூப்பிரண்டு முருகேசன் விசாரணை நடத்தினார்.

    அப்போது வாசுகி கூறுகையில், 3-ந்தேதி சிலர் தன்னை விருப்பம் இல்லாமல் அழைத்து சென்றதாகவும், குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தங்க வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

    மேலும் தங்கள் கட்சிக்கு வந்தால் செல்வாக்கோடு இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். ஆனால் நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்ததால் ஊரில் கொண்டு விட்டு விட்டனர் என்றும் போலீசில் தெரிவித்துள்ளார்.

    இதனை எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் வாசுகியை அனுப்பி விட்டனர். அவரை அழைத்து சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    இதேபோல் முதுகுளத்தூர் யூனியன் 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சாத்தையாவும் கடத்தப்பட்டதாக அவரது மகன் ராஜா முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதில், கவுன்சிலர் பதவி ஏற்றுவிட்டு வந்த எனது தந்தையை அ.தி.மு.க.வினர் கடத்தி சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர் யூனியனில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 4 வார்டுகளையும், சுயேட்சைகள் 7 வார்டுகளையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே மாவட்டத்தில் பரமக்குடி, போகலூர் யூனியன்களிலும் கவுன்சிலர்கள் கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பரமக்குடி யூனியனில் தி.மு.க.வில் 7 பேரும், அ.தி.மு.க.வில் 6 பேரும் வெற்றி பெற்றனர். நேற்று பதவி ஏற்பு விழாவின்போது 11-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் சிவக்குமார், அ.தி.மு.க. கரை வேட்டியுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவருடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் வந்தனர்.

    இதேபோல் போகலூர் யூனியனில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வெற்றி பெற்ற 1-வது வார்டு உறுப்பினர் காளீஸ்வரி, சதன் பிரபாகர் எம்.எல்.ஏ.வுடன் வந்து பதவி ஏற்றார். இதனால் தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த யூனியனில் மொத்தம் உள்ள 8 வார்டில் தி.மு.க.வில் 5 பேரும், இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜனதா, சுயேட்சை தலா ஒருவர் வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க. இங்கு வெற்றி பெறவில்லை.

    மதுரை மாவட்ட பஞ்சாயத்தில் 23 வார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. 13, அ.தி.மு.க. 9, பார்வர்டு பிளாக் 1 இடங்களை பிடித்துள்ளன. இதனால் மாவட்ட பஞ்சாயத்தை தி.மு.க. கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் 3 உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்தால் மாவட்ட பஞ்சாயத்து அவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று அனைத்து உறுப்பினர்களும் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பதவி ஏற்பு முடிந்ததும் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் தனி வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் கேரள மாநிலம் மூணாறுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்களும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வருகிற 11-ந்தேதி மறைமுக தலைவர் தேர்தல் நடை பெறும்வரை அவர்கள் அங்கு இருப்பார்கள் என தெரிகிறது.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி யூனியனில் அ.தி.மு.க.விற்கு 9 உறுப்பினர்களும், தி.மு.க.வுக்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேட்சையாக கோவிலாங்குளம் ஊராட்சி 8-வது வார்டில் போட்டியிட்ட பொறியியல் பட்டதாரி அரவிந்த் வெற்றி பெற்றார். இவர் யூனியன் அலுவலகம் வந்து பதவி ஏற்றுக்கொண்டதும் எந்த கட்சிகளிடமும் சிக்காமல் சுவர் ஏறி குதித்து தப்பினார்.

    இங்கு அ.தி.மு.க. மெஜாரிட்டி உள்ள நிலையில் அரவிந்த் எதற்காக சுவர ஏறி குதித்து சென்றார் என்பது தெரியவில்லை.

    Next Story
    ×