search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப்பயணம் என்றநூலை ஜிகே வாசன் வெளியிட பொன் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டபோது எடுத்தபடம்
    X
    ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப்பயணம் என்றநூலை ஜிகே வாசன் வெளியிட பொன் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டபோது எடுத்தபடம்

    பா.ஜ.க. தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் வரவேண்டும்- தமிழருவி மணியன்

    2021-ல் தமிழகத்தில் மாற்றம் வரும் என்றும் பா.ஜ.க. தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் வரவேண்டும் என்றும் தமிழருவி மணியன் பேசினார்.
    திருச்சி:

    காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் எழுதிய ‘ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்’ என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வக்கீல் கணேசன் தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கேவாசன் நூலை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழருவி மணியன் ஒரு வழிப்போக்கனாக இருந்தால், பிரச்சனை இருந்திருக்காது. ஆனால் அவர் காந்தி காட்டிய, காமராஜர் நடந்த ஒரே வழியில் நடப்பதால்தான் இத்தனை சிரமங்களை சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தமிழருவி மணியனின் நோக்கம். யோக்கியவான்கள் அனைவரையும் நம்பியே தற்போது கடைசி முயற்சியை தமிழருவி மணியன் எடுத்திருக்கிறார்.

    தமிழ்நாட்டில் ஊழலற்ற -நேர்மையான ஆட்சி வருவதற்கு சாதி, மதம், மொழி ஆகியவற்றை வைத்து அரசியல் செய்வதை தடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் மாற்றம் என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான மாற்றமாக இருக்கும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும். நாளைய தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறும். அதற்கான தொடக்க நிகழ்ச்சியாக இதை கருதவேண்டும் என்றார்.

    தமிழருவி மணியன் பேசுகையில், மாற்று கருத்தை முன்வைப்பவர்களை இழித்தும், பழித்தும் பேசுவோரை காட்டிலும் மோசமான பாசிஸ்டுகள், சர்வாதிகாரிகள் இல்லை. மதத்தின் அடிப்படையில் வாக்களித்தால் இந்த நாடு தாங்காது. இந்தியாவின் தலைவிதியை இருவர் மட்டும் எழுத நினைப்பது தவறு. எனவே சிறுபான்மையினரிடம் உள்ள அவநம்பிக்கையை முதலில் போக்க வேண்டும்.

    ஜாதி மதத்தை பார்க்காமல் மனிதத்தை மட்டும் முன்னிறுத்தி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த நம்பிக்கையில்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். எம்.ஜி.ஆர். பணம் கொடுத்தோ, சாதி, மதம் பற்றி பேசியோ வாக்கு பெறவில்லை. எம்.ஜி.ஆரை போன்று மக்கள் மனதை வென்றவர் ரஜினி. அவர் மூலம் ஊழலற்ற நேர்மையான வெளிப்படை தன்மையுடைய ஆட்சியை தமிழ்நாட்டில் மக்கள் பார்க்கவேண்டும் என்பதே எனது ஆசை.

    2021-ல் தமிழ்நாட்டில் மாற்றம் வரும். பொன்.ராதாகிருஷ்ணன், ஜி.கே.வாசன் ஆகியோர் ரஜினியை ஏற்கவேண்டும். பா. ஜ.க.வின் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் வரவேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
    Next Story
    ×