search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    அதிமுக மீது வீண்பழி சுமத்துகிறது திமுக- அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

    ஓட்டு அரசியலுக்காக அ.தி.மு.க. மீது தி.மு.க. வீண்பழி சுமத்துகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டியுள்ளார்.
    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினர், அமைச்சர் செல்லூர் ராஜூவை இன்று சந்தித்தனர். பின்னர் அவர்களுடன் கே.கே.நகர் சென்ற செல்லூர் ராஜூ அங்குள்ள எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அ.தி.மு.க. தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியுமா? என்ற கூற்றை மாற்றி காட்டியுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை விட தற்போது அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். எனவே தேர்தல் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

    உள்ளாட்சி தேர்தல் பணியில் அ.தி.மு.க.வினர் இன்னும் முனைப்போடு செயல்பட்டு இருந்தால் மேலும் வெற்றியை பெற்றிருக்க முடியும்.

    அ.தி.மு.க.வினர் கட்டுக்கோப்புடன் இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதையே முடிவுகள் காட்டுகிறது.

    எனவே நாம் அனைவரும், ஒரு தாய் பிள்ளையாக இணைந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. எப்போதும் மத சார்பற்ற அணியாக தான் உள்ளது. ஆனால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அ.தி.மு.க. மீது மத சாயத்தை பூசி வருகிறார்கள். ஓட்டு அரசியலுக்காக அ.தி.மு.க. மீது தி.மு.க. வீண் பழி சுமத்தி வருகிறது.

    சிறுபான்மையினரை பாதுகாப்பதிலும், அவர்களின் நலனை பேணுவதிலும் அ.தி.மு.க. எப்போதும் முக்கிய பங்காற்றும்.

    எனவே இனிவரும் தேர்தல்களில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் வகையில் கட்சியினர் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×