search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஎச் பாண்டியன் உடல்
    X
    பிஎச் பாண்டியன் உடல்

    முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். இரங்கல்

    முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

    சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    உடல் நிலை தேறியதால் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வந்தனர். இன்று காலை திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 8 மணியளவில் இறந்தார்.

    பி.எச்.பாண்டியன் உடல் அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  மேலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    டாக்டர் பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

    கழக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மறைந்தவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்று, அவர் ஆற்றிய பணிகள் அ.தி.மு.க.வுக்கு பேருதவி புரிந்தன.

    தமிழ்நாட்டின் மிகச்சிறந்த வழக்கறிஞராகவும், பேச்சாளராகவும், அரசியல் வல்லுனராகவும், சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராகவும், கழக பாராளுமன்ற குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். அவரது மறைவு அ.தி.மு.க.வுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையில்லை.

    டாக்டர் பி.எச்.பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக கழக அமைப்புச் செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனுக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    பி.எச்.பாண்டியன் மறைவுக்கு தமிழிசை சவுந்தரராஜன், வைகோ, டாக்டர் ராமதாஸ், பொன்.ராதாகிருஷ்ணன், முத்தரசன், விஜயகாந்த், ஜி.கே.வாசன், சரத்குமார், திருநாவுக்கரசர், என்.ஆர்.தனபாலன், வைகை செல்வன், ஏ.சி.சண்முகம் ஆகியோர் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×