search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெற்றியில் நாமமிட்டு, கோவணம் அணிந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு-விவசாயிகளை படத்தில் காணலாம்.
    X
    நெற்றியில் நாமமிட்டு, கோவணம் அணிந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு-விவசாயிகளை படத்தில் காணலாம்.

    திருச்சியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்

    திருச்சியில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நஷ்டஈடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் போது தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை, நதிகள் இணைப்பு மரபணு மாற்ற விதைகளுக்கு தடை, விவசாயிகளின் கடனுக்கு எதிரான ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மேட்டூர்-அய்யாறு-உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி- குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.

    கேரளா இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்து முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகளின் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார்.

    இதற்காக அனுமதி அளிக்க கோரி திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் மனு அளித்தார். முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பின்னர் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநகர போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை 7 நாட்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று காலை அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ஜங்‌ஷன் விக்னேஷ் ஓட்டல் அருகில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். முதல் நாளான இன்று நெற்றியில் நாமமிட்டும், கோவணம் அணிந்து கொண்டும் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களிடம் திருச்சி மேற்கு மாவட்ட ஆர்.டி.ஓ. அன்பழகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளின் போராட்டத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×