search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தாண்டு முன்னிட்டு நடைபெறும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை ஆய்வு செய்தார்.
    X
    புத்தாண்டு முன்னிட்டு நடைபெறும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை ஆய்வு செய்தார்.

    திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் 200 போலீசார் பாதுகாப்பு

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    பூந்தமல்லி:

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 10.30 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டுள்ளன.

    சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புத்தாண்டு தினத்தில் அம்மனை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்களின் வசதிக்காக சென்னையின் பிற பகுதிகளில் இருந்து மாநகர சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்த வசதி, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பக்தர்களின் கூட்டத்தை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் கோவிலில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து இணை ஆணையர் செல்லத்துரை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புத்தாண்டையொட்டி கோவிலில் சிறப்பு தரிசனத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    கோவில் கருவறையில் அர்ச்சனை தேங்காய் உடைப்பதற்கு அனுமதியில்லை. அதற்குப் பதிலாக 3-ம் பிரகாரத்தில் 3 இடங்களில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்றைய தினம் மட்டும் லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் முன்னாள் அறங்காவலர் ரமேஷ், கோவில் அதிகாரிகள் கண்ணன், மலைச்சாமி உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இதேபோல் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் கோ பூஜை மற்றும் தனூர் மாத அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×