search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துகுள்ளான காரை படத்தில் காணலாம்
    X
    விபத்துகுள்ளான காரை படத்தில் காணலாம்

    நாமக்கல் அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

    நாமக்கல் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் திருச்சி என்ஜினீயர் குடும்பத்தினர் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    நாமக்கல்:

    வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). என்ஜினீயரான இவர் திருச்சி ஸ்ரீரங்கம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாசன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் தனது மனைவி தேவிபிரியா (34), மகன் சாய்கிருபா (3), மாமனார் கோவிந்தன் (72), மாமியார் ராஜாமணி (68) ஆகியோருடன் காரில் மராட்டிய மாநிலம் புட்டப்பர்த்தியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அனைவரும் திருச்சிக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை அசோக்குமார் ஓட்டி வந்தார்.

    இந்த கார் நேற்று மாலை 4 மணி அளவில் நாமக்கல்லை அடுத்த ரெட்டிப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த அசோக்குமார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த புதுச்சத்திரம் போலீசார் காரில் இருந்து 5 பேரின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு விரைந்து வந்த மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோரும் மீட்பு பணியை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினர்.

    பின்னர் மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கோவிந்தன் உள்ளிட்ட 4 பேரின் சொந்த ஊர் திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு லாரியில் பருப்பு லோடு ஏற்றி வந்ததும், டிரைவர் த‌‌ஷ்தகிரி (50) லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு சமையல் செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவர் த‌‌ஷ்தகிரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-

    விபத்து நடந்த இடத்தை பார்க்கும் போது காரை ஓட்டிவந்த அசோக்குமார் தூங்கியதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. லாரியை பொறுத்த வரையில் சாலையோரம் தான் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பகுதி ‘பார்க்கிங்’ அனுமதி உள்ள பகுதி இல்லை. எனவே அனுமதி இல்லாத பகுதியில் லாரியை ‘பார்க்கிங்’ செய்த டிரைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×