search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்.

    கோவையில் தி.மு.க. பிரமுகர் பங்களாவில் ரூ. 2½ லட்சம் பழைய 500, 1000 நோட்டுகள் பறிமுதல்

    கோவையில் தி.மு.க. பிரமுகர் பங்களாவில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ. 2½ லட்சம் பழைய 500, 1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கறுப்பு பணத்தை ஒழிக்கவும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் கடந்த 2016 டிசம்பர் 8-ந்தேதி உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.

    பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பின்னர் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது. உயர் மதிப்புடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 3 ஆண்டுகளாகியும் இன்றும் ரூபாய் நோட்டுகள் சிக்கி வருகிறது.

    இந்நிலையில் கோவை வடவள்ளி லட்சுமிநகரில் தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு ஷேக், ரஷீத் ஆகியோர் வாடகைக்கு தங்கியுள்ளனர்.

    இவர்கள் தங்களிடம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும், புதிய ரூபாய் நோட்டுகள் 1 லட்சம் தந்தால் மதிப்புழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டு 2 லட்சம் தருவதாக தெரிவித்தனர். இது குறித்து தெரிந்ததும் அங்கு ஏராளமானோர் வந்து சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய புலனாய்வு பிரிவினர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு வேல்முருகன், இன்ஸ் பெக்டர் மணிவண்ணண் தலைமையிலான வடவள்ளி போலீசார் நேற்று (சனிக்கிழமை) மாலை முதல், நள்ளிரவு வரை அந்த பங்களாவில் ரகசிய சோதனை நடத்தினர்.

    அந்த பங்களாவில் உள்ள அறைகளில் கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. 268 கட்டுக்களில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலுல் பல கட்டுகளில் முதல் தாள் மற்றும் கடைசி தாள்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும், அதன் இடையே காகித தாள்கள் வைக்கப்பட்டு இருந்த கட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. அங்கு இருந்த இருவரும் தப்பி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த பழைய நோட்டு கட்டுகள் யார் கொடுத்தது? இவர்கள் வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும், ஹவாலா கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×