search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உதயகுமார்
    X
    அமைச்சர் உதயகுமார்

    தமிழகத்துக்கு கிடைத்த விருதை குறை கூறுவதா?- ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கண்டனம்

    தமிழகம் முதலிடத்தை பிடித்ததற்கு மு.க.ஸ்டாலின் அரசியல் சாயம் பூச பார்க்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள புளியங்குளம், கரடிக்கல், கீழ உரப்பனூர் பகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மெகா வெற்றி கூட்டணியை முதல்- அமைச்சரும், துணை முதலமைச்சரும் உருவாக்கியுள்ளனர்.

    இங்கு போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று 100 சதவீதம் உங்களுக்கு பணியாற்றி உங்களுக்கு தேவையான உள் கட்டமைப்புகளை நிறைவேற்றித் தருவார்கள்.

    இந்த பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரடிக்கல் பகுதியில் பாஸ்போர்ட் உருவாக்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டங்கள் இன்னும் நிறைய வர உள்ளது.

    கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டிற்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் திட்டத்தினை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனை உங்களுக்கு வழங்க நினைத்தபோது தி.மு.க. நீதிமன்றம் சென்று தடை வாங்கியுள்ளது.

    இந்தியத் திருநாட்டில் 29 மாநிலங்கள் உள்ளது. இதில் 18 பெரிய மாநிலங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து அதில் சிறந்த நிர்வாகம், சட்டம் ஒழுங்கு என பத்து துறைகளை பட்டியல் எடுத்து ஆய்வு மேற்கொண்டது. இதில் முதல்- அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

    ஒலிம்பிக் கோப்பையை பெறுவதைக் காட்டிலும், உலககோப்பை கோப்பையை காட்டிலும் இந்த விருதை மிக உயர்ந்ததாக தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இந்த விருது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கிடைத்த பெருமையாகும்.

    இந்தியத் தாயின் பரிசு, தமிழ் தாய்க்கு கிடைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். 5 முறை தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி செய்த போது இதே போல் ஒரு விருது அல்லது ஒரு பரிசை பெற்று தந்தது உண்டா?

    இரண்டாம் இடம், மூன்றாம் இடம்பிடித்த மாநிலங்கள் எல்லாம் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் முதலமைச்சரை சாதாரண ஆளாக நினைத்தோம். இன்று பிற மாநில முதல்-அமைச்சர்களுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் முதல்-அமைச்சர் உள்ளார் என்ற காழ்ப்புணர்ச்சியால் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

    ஸ்டாலின் எந்த நல்ல திட்டங்கள் எதை செய்தாலும் குற்றம் காண வேண்டும் என்ற நிலையில்தான் உள்ளார். இந்தப் பெருமை ஒட்டுமொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை என்று நினைக்கவில்லை. அவரும் இந்த தமிழகத்தை சார்ந்தவர் என்று நினைக்கவில்லை.

    நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் முதல்-அமைச்சர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்றபோது மக்களோடு மக்களாக வரிசையாக நின்று வாக்களித்தார். அவருடன் காவல்துறை சார்ந்த யாரும் பாதுகாப்பிற்காக நிற்கவில்லை. ஏனென்றால் அவர் எளிமையான முதல்-அமைச்சருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

    சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். சீன அதிபரும், பாரதப் பிரதமரும் தமிழகத்திற்கு வந்தனர். அதில் சீன அதிபர் தமிழகத்தின் பாரம்பரிய ஏற்பாடு என் மனதை கவர்ந்தது என்று கூறினார்.

    அதே போல் பாரதப் பிரதமரும் முதல்- அமைச்சரை பாராட்டினார். சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்ததினால் இருநாட்டு தலைவரும் தமிழகத்தைதான் தேர்ந்தெடுத்தார்கள்.

    முதல்-அமைச்சருக்கு பெருமை சேர்ந்தால் நமது வாழ்க்கை சூனியமாகிவிடும் என்று ஸ்டாலின் தமிழகம் முதலிடத்தை பிடித்ததற்கு அரசியல் சாயம் பூச பார்க்கிறார்.

    இன்றைக்கு இரவு பகல் பாராமல் உழைத்து தமிழகத்திற்கு விருதினைப் பெற்றுத்தந்த முதல்-அமைச்சரை நீங்களெல்லாம் பாராட்டும் வண்ணம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து தி.மு.க. கூட்டணிக்கு பாடம் புகட்டுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் மாவட்ட துணைச்செயலாளர் அய்யப்பன், அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் சேர்மன் தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×