search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுக்கு வாய்ப்பு- தினகரன்

    வாக்குச் சீட்டு முறையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், துரோகிகளும், எதிரிகளும் அதிகார பலத்தையும் மற்றும் சமூக விரோதிகளை வைத்து முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம், பணபலம், அச்சுறுத்தல் என அத்தனையையும் மீறி உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுக்க, அனைத்து இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது.

    இந்தப் பெருமைக்கு காரணமான உங்களின் உற்சாகமான பங்களிப்புக்கும், துணிச்சலுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாக்குப்பதிவு நாளன்று, நமது வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குப்பதிவு நேரம் முடியும் வரை ஒவ்வொரு நொடியும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

    வாக்குச் சீட்டு முறையில் இந்தத் தேர்தல் நடப்பதால், துரோகிகளும், நமது எதிரிகளும் அதிகார பலத்தையும் மற்றும் சமூக விரோதிகளை வைத்து முறைகேடுகளில் ஈடுபட பெருமளவில் வாய்ப்பு இருக்கிறது.

    இதை மனதில் வைத்து அதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத வகையில் உறுதியுடனும் விழிப்புடனும் இருந்து நமது இயக்கத்தின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் வாக்குப்பதிவு நாள் மட்டுமன்றி வாக்கு எண்ணிக்கை நாளன்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட முயல்வார்கள் என்பதால் வாக்குச் சாவடி முகவர்களாக செல்லும் நமது கழக உடன்பிறப்புகள் மிகுந்த விழிப்புடனும் துணிச்சலுடனும் செயல்பட்டு நமது இயக்கத்தின் வெற்றியினை உறுதிப்படுத்த வேண்டும்.

    நமது இயக்கத்தின் மீது கொண்ட அன்பு மற்றும் நம்பிக்கையின் காரணமாக தமிழகம் முழுக்க பல இடங்களில் நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து, உங்களின் இடையறாத உழைப்பின் காரணமாக வெற்றிபெற இருப்பவர்களையும் சேர்த்து நேரில் சந்திக்க இருக்கிறேன்.

    வெற்றி பெற்றவர்களுடனான அந்தச் சந்திப்பே ஒரு மாநாடு போல் இருக்கும் வகையில் பெரும் வெற்றிகளை ஈட்டும் வகையில் வாக்குப் பதிவின் கடைசி நிமிடம் வரை விழிப்போடு இருங்கள் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×