search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரிய கிரகணம்
    X
    சூரிய கிரகணம்

    மதுரையில் சூரிய கிரகணத்தை பாதுகாப்புடன் பார்த்து ரசிக்க ஏற்பாடு

    மதுரையில் நாளை மறுநாள் நிகழும் வளை வடிவ சூரிய கிரகணத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    புதுடெல்லி விக்யான் பிரசார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நாளை மறுநாள் (26-ந் தேதி) அதிசய சூரிய கிரகணம் நிகழ்கிறது. காலை 8.07 மணிக்கு தொடங்கும் கிரகணம் 11.16 மணி வரை நீடிக்கிறது.

    அப்போது நிலவு சூரியனை மறைக்கும் நிகழ்வு கோவை, ஊட்டி, கரூர், திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை (சில பகுதிகள்) உள்ளிட்ட இடங்களில் காலை 9.31 மணி முதல் 9.33 மணி வரை முழுமையாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் பகுதியாகவும் தெரியும்.

    சுமார் 2 நிமிடங்கள் வரை நெருப்பு வளையம் போல சூரியன் அற்புதமாக காட்சியளிக்கும். மதுரையில் சூரிய கிரகரண வளைவு காட்சி 95 சதவீதம் தெரியும்.

    கிரகணத்தின் போது சூரியனில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதில் இருந்து மர்ம கதிர்களும் வருவதில்லை.

    அதனால் சிறுவர்கள் முதல் கர்ப்பிணிகள் உள்பட அனைத்து மக்களும் இந்த அரிய நிகழ்வை காணலாம். வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தால் கிரகணத்தை பார்க்க முடியாது.

    இதற்கு முன்பு தமிழகத்தில் கடந்த 2010-ல் தான் இதுபோன்ற நிகழ்வு நிகழ்ந்தது. அடுத்த நிகழ்வு 2034-ல் கிரகணம் ஏற்படும். இந்த கிரகணத்தை பார்ப்பதற்கு அச்சப்பட தேவையில்லை.

    பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பார்ப்பது நல்லது. ஏனெனில் அதிக பிரகாசமான ஒளியை நாம் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. வெறும் கண்களால் பார்த்தால் மிகவும் அரிதாக கண்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே சூரிய வடிகட்டி எனப்படும் சோலார் பில்டர் கண்ணாடி, நுண்துளை கேமரா, உருண்டை வடிவ எதிரொளிப்பு கண்ணாடி மூலம் திரையில் சூரிய பிம்பத்தை வீழ்த்தி பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மதுரையில் சிம்மக்கல் தைக்கால் பாலம், ராஜாமில் பாலம், பழங்காநத்தம் வளைவு, ஆரப்பாளையம் வளைவு, வண்டியூர் பூங்கா, கலிலியோ அறிவியல் மையம் சார்பில் தெப்பக்குளம், ஈடன் சயின்ஸ் சென்டர் சார்பில் முத்துப்பட்டி, திருமங்கலம் துளிர் அறிவியல் மையம் சார்பில் மம்சாபுரம், தங்களாச்சேரி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிவியல் மையத்தின் மாநிலத் தலைவர் தினகரன் தெரிவித்தார்.

    Next Story
    ×