search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் வேலுமணி
    X
    அமைச்சர் வேலுமணி

    ரூ.447 கோடி செலவில் குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டம்- அமைச்சர் வேலுமணி

    தனியார் பங்களிப்புடன் ரூ.447 கோடி செலவில் குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் வீடுகள் தோறும் திடக்கழிவுகளை தரம் பிரிக்கும் நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    மாநகராட்சியின் 7 மண்டலங்களில், சுமார் 9 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இரண்டு திட்டக்கூறுகளாக, வருடத்திற்கு ரூ.447 கோடி மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.

    இதற்காக ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த உர்பேசர் நிறுவனம் மற்றும் நமது நாட்டின் சுமீட் பெசிலிடீஸ் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு 8 ஆண்டு காலத்திற்கு அனுமதி அளித்து இன்று பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில், தற்போது 141 சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் கூடங்களும், 40 எண்ணிக்கையில் உயிரி எரிவாயு நிலையங்களும் பயன்பாட்டில் உள்ளன. நாள்தோறும் சுமார் 425 டன் மக்கும் குப்பை இங்கு கையாளப்படுகிறது. உலர் குப்பைகளை மறுசுழற்சி செய்து, பயன்பாட்டிற்கு உட்படுத்த 184 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டு சுமார் 200 டன் குப்பை கையாளப்பட்டு வருகிறது.

    இந்த 7 மண்டலங்களில் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து வீடுகளில் இருந்தும் பெறப்படும் 100 சதவீதம் குப்பைகளும் முறைப்படி தரம் பிரிக்கப்படும். இதற்காக, பழைய மூன்று சக்கர மிதிவண்டிக்குப் பதிலாக, மின்கல வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

    தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை வீடுகள்தோறும் பெறுதல், குறைந்த உறுதி செய்யப்பட்ட கழிவுகளை பதனிடுதல், வளாகத்திற்கு கொண்டு சேர்த்தல், பொது மக்களிடம் பெறப்படும் புகார்களை 12 மணி நேரத்திற்குள் சரிசெய்தல் போன்ற 34 எண்ணிக்கை செயல்திறன் குறியீடுகள் வாயிலாக, பணிகளை கண்காணித்து, அதன் மதிப்பீட்டு அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படும்.

    சாலைகள், மக்கள் பெருமளவில் கூடும் இடங்கள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி குப்பைகள் இல்லாத வகையில் பராமரித்தல் ஆகிய இப்பணிகள், அவ்வப்போது சீராய்வு செய்யப்பட்டு குப்பை தேக்கமின்றி அகற்றவும், தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர்சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×