search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம்

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வருகிறார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக் கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

    பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ந்தேதி மதியம் 12 மணியளவில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து புதுவை வருகிறார்.

    ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் புதுவைக்கு வரும் அவர் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவரை கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்கின்றனர்.

    அங்கிருந்து கார் மூலம் காலாப்பட்டில் உள்ள புதுவை மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார். அங்குள்ள விருந்தினர் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

    தொடர்ந்து பல்கலைக் கழக அரங்கத்தில் மதியம் 12.40 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் புதுவை கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிறார். அங்கு மதிய உணவு அருந்துகிறார்.

    சிறிது நேர ஓய்வுக்கு பிறகு அரவிந்தர் ஆசிரமம் செல்கிறார். அங்கு அரவிந்தர், அன்னை சமாதியில் வணங்குகிறார். ஆசிரமத்தை சுற்றிப்பார்க்கும் அவருக்கு ஆசிரம நிர்வாகிகள் ஆசிரமத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்குகின்றனர்.

    பின்னர் அங்கிருந்து ஆரோவில் செல்கிறார். ஆரோவில் மாத்ரூ மந்திரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார். மாணவர்களுடன் உரையாடுகிறார்.

    தொடர்ந்து அவர் புதுவை கவர்னர் மாளிகைக்கு கார் மூலம் திரும்புகிறார். அங்கு இரவு தங்குகிறார்.

    மறுநாள் 24-ந்தேதி காலை கார் மூலம் கவர்னர் மாளிகையில் இருந்து புதுவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் மாவட்டத்துக்கு செல்கிறார்.

    காரைக்கால் ரிங்ரோட்டில் ஹெலிகாப்டர் இறங்க வசதியாக புதிதாக ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஹெலிகாப்டரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் திருநள்ளாறில உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் அறங்காவலர் குழு சார்பில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர், அவர் கோவிலில் தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிடுகிறார். அங்கிருந்து மீண்டும் ஹெலிபேடு திரும்பும் அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர் கார் மூலம் செல்லும் வழிநெடுகிலும் பாதுகாப்பு கருதி தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தமிழக பகுதியில் உள்ள ஆரோவில்லுக்கு ஜனாதிபதி செல்வதால் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    தமிழகம் மற்றும் புதுவை போலீசார் ஜனாதிபதி செல்லும் சாலைகளை ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×