search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் டி.ஜி.பி. ரவி
    X
    கூடுதல் டி.ஜி.பி. ரவி

    ஆபாச படம் பார்த்த மாணவிகள் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டனர்- கூடுதல் டி.ஜி.பி. ரவி தகவல்

    ஆபாச படம் பார்த்த மாணவிகள் தன்னை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு  பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்கள் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராகத்தான் நடைபெறுகின்றன. இதனை தடுக்கும் நோக்கில் தமிழக போலீசார் செயல்பட்டு வருகிறார்கள்.

    7.3 கோடி மக்கள் தொகையை கொண்ட தமிழகத்தில் காவலன் செயலியை 10 லட்சம் பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிலும் 4 லட்சம் பேர்தான் பதிவு செய்துள்ளனர்.

    செயலியில் ஒரு வாரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். போன் நம்பர் மட்டும் பதிவு செய்யப்படும். காவலன் செயலியை வருங்காலங்களில் பயன்படுத்த தேவையில்லாத நிலையை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

    சிறார்களின் ஆபாச படங்களை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது கூட 30 பேர் பட்டியலை சென்னை போலீசுக்கு அனுப்பி விட்டுத்தான் வந்துள்ளேன்.

    இரண்டு மாணவிகள் என்னைச் சந்தித்து ஆபாச படம் பார்த்ததாகவும், எங்களை மன்னித்து விடுங்கள் என கூறினர். இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள் என சொல்லி அனுப்பினேன். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதால் அதற்கு நாம் இரையாகி விடுகின்றனர். ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் முன்னேறலாம்.

    இணையத்தை ஒழுக்கமாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறான் என நினைத்துக் கொள்ளுங்கள்.

    பெண்கள் எப்படி உடையணிகிறார்கள் என்பது பார்ப்பவர்களிடம் இருக்கிறது. தவறாகக் கருதினால் பார்வையில் கோணல் இருப்பதாகவே அர்த்தம்.

    மழையால் குடை நனைந்தது. நான் நனையவில்லை என்பார்கள். காவல்துறை உங்களுக்கு குடையாக இருப்போம். நனையவிட மாட்டோம்.

    ஆண்களுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் உடல்வலு இருக்கிறது. ரவுத்திரம் பழகுங்கள். யாராவது சீண்டினால் உதையுங்கள். குத்துங்கள். தூக்கியெறிங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×