search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணி
    X
    மணி

    குடிபோதையில் தினமும் டார்ச்சர் செய்ததால் மகனை அடித்துக் கொன்றேன்- தந்தை வாக்குமூலம்

    திருச்செங்கோடு அருகே குடிபோதையில் தினமும் டார்ச்சர் செய்ததால் மகனை அடித்துக் கொன்றேன் என்று கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 58). இவரது மனைவி சாந்தி(52). இவர்களது மகன்கள் ஆனந்த் (38), அரவிந்த் (28). இதில் ஆனந்துக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் தனியே வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான அரவிந்துக்கு திருமணம் ஆகவில்லை.

    மது குடிக்கும் பழக்கம் இருந்த அரவிந்த் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து சொத்தை விற்று தருமாறு தந்தை மணியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு சென்ற அரவிந்த், தனது தந்தை மணியிடம் சொத்து தொடர்பாக தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, மணி வீட்டில் இருந்து வெளியே சென்றார். போதை தலைக்கேறியதால் அரவிந்த், அங்கேயே படுத்து தூங்கினார்.

    இதையடுத்து, மணி திரும்ப வீட்டிற்கு வந்தார். இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணி, வீட்டில் இருந்த கட்டையை எடுத்து, அரவிந்தின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்தகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனைத்தொடர்ந்து மணி, திருச்செங்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மகனை அடித்துக் கொன்றது ஏன்? என பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    நாங்கள் 45 வருடங்களுக்கு முன்பு, வெளியூரிலிருந்து திருச்செங்கோடு வந்து குடியேறினோம். எனக்கு 2 வீடுகள் உள்ளன. அவற்றைக் கட்ட கடன் வாங்கியிருந்தேன். ஒரு வீட்டை விற்று கடனை கட்டி விடலாம் என்று சொன்னேன். ஆனால் வீட்டை விற்றால், பணம் முழுவதையும் தனக்கே தரவேண்டும் என கேட்டு அரவிந்த் தகராறு செய்து வந்தான்.

    மேலும் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து வந்தான். அக்கம், பக்கத்தினர் மற்றும் தெருமக்களிடமும் வீண் தகராறு செய்து, தொந்தரவு கொடுத்து வந்தான். தெருமக்கள் இவனால் படும் பாட்டை என்னால் சகிக்க முடியவில்லை.

    நேற்று முன்தினம் இரவு உடல் நிலை சரியில்லை என்று அரவிந்த் சொன்னதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்தேன். ஆனால், சிறிது நேரத்தில் குடித்துவிட்டு வந்து, வீட்டை விற்று பணத்தைக் கொடு அல்லது வீட்டை விட்டு ஓடி போய்விடு என்று கூறி தகராறு செய்து, பலமாக தாக்கினான். நான், வலி தாங்காமல் வீட்டை விட்டு ஓடிவிட்டேன்.

    சிறிது நேரம் கழித்து திரும்ப வீட்டிற்கு வந்தபோது, அரவிந்த் தூங்கிக் கொண்டிருந்தான். அவனால் எனக்கு நிம்மதி இல்லை. தெருமக்களும் அமைதியாக வாழமுடியவில்லை. அவன் இருப்பதை விட, இறப்பதே மேல் என்று நினைத்து, வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து, அவனது தலையில் பலதடவை அடித்தேன். இதில் அவன் இறந்து விட்டான். பின்னர் நான், நேராக போலீஸ் நிலையத்திற்கு வந்து சரண் அடைந்தேன்.

    இவ்வாறு மணி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.

    கொலையாளி மணியை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×