search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    பெண் டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பிரசவ வார்டில் பெண் டாக்டரை செருப்பால் தாக்கிய 2 பேர் கைது

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் பெண் டாக்டரை செருப்பால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் மனைவி முனீஸ்வேலுமணி (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான இவரை உறவினர்கள் பிரசவத்துக்காக ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முனீஸ்வேலுமணியை டாக்டர்கள் ‘செப்டிக் லேபர் தியேட்டர்’ எனப்படும் கிருமி நீக்கப்பட்ட அறையில் சேர்த்தனர்.

    பொதுவாக இந்த அறைக்குள் வெளி ஆட்கள் செருப்பை வெளியே கழற்றி விட்டு தான் செல்ல வேண்டும். அதுவும் தவிர கர்ப்பிணிப் பெண்ணுடன் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

    இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மகப்பேறு மற்றும் பெண்கள் நலத்தில் பட்ட மேற்படிப்பு படிக்கும் டாக்டர் மாலதி என்பவர் முனீஸ்வேலுமணிக்கு பிரசவ வார்டில் மருத்துவம் பார்த்தார்.

    அப்போது முனீஸ்வேலுமணிக்கு உதவியாக இருந்த ராஜராஜேஸ்வரி என்பவர் காலில் செருப்புடன் செப்டிக் லேபர் தியேட்டருக்குள் நுழைந்தார். “காலணியுடன் உள்ளே நுழையக் கூடாது” என்று மருத்துவர் மாலதி கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜராஜேஸ்வரி, “நீ என்னை எப்படி வரக்கூடாது என்று சொல்லலாம்” என்றார். அப்போது அவரது மாமியார் முருகேஸ்வரியும் ராஜராஜேஸ்வரிக்கு ஆதரவாக இருந்து உள்ளார்.

    இதற்கிடையே இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது ராஜ ராஜேஸ்வரி செருப்பை கழற்றி டாக்டர் மாலதியை அடித்து உள்ளார். அவருடன் மாமியார் முருகேஸ்வரியும் சேர்ந்து கொண்டார். இதில் மாலதிக்கு காதில் ரத்தம் வழிந்தது. இதையடுத்து டாக்டர் மாலதி மயங்கி விழவே, அவரை ஆஸ்பத்திரி நிர்வாகம் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தது.

    அதன்பிறகு டாக்டர் இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக தெரிகிறது.

    இதனையடுத்து அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் “மகப்பேறு மருத்துவ பிரிவில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    மருத்துவரை செருப்பால் தாக்கியவர் மீது மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் மாலதியை தாக்கியதாக ஒத்தக்கடை ராஜராஜேஸ்வரி மற்றும் முருகேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    Next Story
    ×