search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாயத்து தலைவர் ஏலம் விட்டது தொடர்பாக  கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்தனர்.
    X
    பஞ்சாயத்து தலைவர் ஏலம் விட்டது தொடர்பாக கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.21 லட்சத்துக்கு ஏலம்- கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.21 லட்சத்துக்கு ஏலம் விட்பட்டுள்ளது என்று கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஆதனகுறிச்சி, கிழவனேரி, கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊராட்சி தற்போது பெண்கள்(பொது) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி தலைவர் பதவிக்கு ஒரு பெண் வேட்பாளரை தேர்வு செய்துள்ளனர். இதற்காக ரூ.21 லட்சம் ஏலம் விடப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக எங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளனர். இதனால் எங்கள் சமுதாயத்தினர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குறைவான வாக்காளர்களை கொண்டுள்ளதால் நாங்கள் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்று கருதி எங்களை கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக தேர்தலுக்கு பின்னர் எங்கள் கிராமத்திற்கான நலத்திட்டங்கள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே எங்களுக்கு தனி ஊராட்சி ஒதுக்கி தரவேண்டும். அல்லது அருகில் உள்ள மற்ற ஊராட்சிகளோடு சேர்த்துவிட வேண்டும். கடந்த காலங்களில் மேற்கண்ட பகுதியில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் நாங்கள் முழுமையாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த முறையும் அதேபோன்று நிகழ வாய்ப்பு உள்ளது.

    எனவே நாங்கள் அச்சமின்றி வாக்களிக்க கண்ணன்கோட்டை அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்து தரவேண்டும். இல்லாவிட்டால் ஆதன குறிச்சி காலனி, கிழவனேரி காலனி, கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதுகுறித்து கலெக்டர் வீரராகவராவிடம் கேட்ட போது, ’பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட்டுள்ளனரா? என்று அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்துவார்கள். தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போதைய நிலையில் புதிதாக ஊராட்சி ஒதுக்குவது, வாக்குச் சாவடிகளை மாற்றி அமைப்பது முடியாது. இருப்பினும் அப்பகுதி மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்‘ என்று கூறினார்.

    Next Story
    ×