search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    தி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு

    முதல்-அமைச்சரை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சேலம் எம்.பி.யாக இருப்பவர் எஸ்.ஆர்.பார்த்திபன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், தி.மு.க. கட்சியின் சார்பில் சேலம் தொகுதியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றேன்.

    தமிழகத்தில் எங்கள் கட்சி பிரதான எதிர்கட்சியாக திகழ்ந்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர், சேலத்தில் கடந்த ஜூன் 7-ந்தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அதற்கு நான் சேலத்தில் தேவையில்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சரையும், தமிழக அரசின் கொள்கையையும் விமர்சனம் செய்து பேட்டி அளித்தேன்.

    என்னுடைய விமர்சனத்தினால் முதல்அமைச்சருக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக, எனக்கு எதிராக சேலம் மாவட்ட கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு எனக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது.

    மக்கள் பிரதிநிதி என்ற முறையில், தமிழக அரசின் தவறான கொள்கைகளை விமர்சனம் செய்ய ஜனநாயக உரிமை எனக்கு உள்ளது. எனவே, எனக்கு எதிராக தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யவேண்டும்.

    இந்த வழக்கு விசாரணைக்கு சேலம் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கவேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சேலம் கோர்ட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.எம்.இசக்கியப்பன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.
    Next Story
    ×