search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் - மார்க்கெட் குடோன்களில் போலீசார் சோதனை

    திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட மார்க்கெட் குடோன்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    நெல்லை:

    இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளது. வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வெங்காயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வெங்காயத்தை சிலர் பதுக்கி வைத்து இருக்கலாம் என்று உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்து உள்ளது.

    அப்படி வெங்காயம் பதுக்குவதை தடுப்பதாக தமிழக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் உத்தரவின் பேரில் மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அறிவுரையின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சிவசுப்பு, சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்காதர் ஆகியோர் தலைமையில் போலீசார் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், பாவூர்சத்திரம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் ஆகிய மார்க்கெட்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் எங்கும் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவில்லை. தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் யாராவது வெங்காயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தால் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்போன் நம்பர் 9840923723, சப்-இன்ஸ்பெக்டர் செல்நம்பர் 9498143651 ஆகியவைகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பு, சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்காதர் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

    இதே போல் தூத்துக்குடி மாவட்டத்திலும் குடோன்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதன்படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர்.

    இதுகுறித்து தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெங்காயம் விலை உயர்வு காரணமாக பதுக்கல், கடத்தல், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு சட்டவிரோதமாக அத்தியாவசிய குடிமை பொருட்களில் ஒன்றான வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயம் சட்டவிரோதமாக பதுக்கலோ அல்லது கடத்தல் போன்ற சம்பவங்களோ நடந்தால் பொதுமக்கள், தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு 94981 94533, 94458 80573 ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ, வாட்ஸ்அப் தகவல்களாகவோ தெரிவிக்கலாம். அதே போன்று 04612346608 ஆகிய எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×