search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று குறைந்தாலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் காட்சி
    X
    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று குறைந்தாலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் காட்சி

    நெல்லை, தென்காசி பகுதியில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    நெல்லை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து குளங்கள், அணைகள் உள்ளிட்டவை நிரம்பி வழிகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று அணையின் நீர்மட்டம் 142.60 அடியாக உள்ளது. இன்று காலை வினாடிக்கு 2,815 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 149.93 அடியாக உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணையின் உச்சபட்ச உயரம் 118 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் கடந்த 30-ந் தேதி 288 மில்லிமீட்டர் மழையும், மணிமுத்தாறில் 150 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 92 அடியானது.

    இதையடுத்து தொடர்மழை காரணமாக நேற்று முன்தினம் 96.40 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 99 அடியாக இருந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நேற்று மதியம் 2 மணியளவில் அதன் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 100.50 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று காலை அணைக்கு 1,608 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து படித்துறை மண்டபங்களை தண்ணீர் மூழ்கடித்தபடி செல்கிறது. பல நாட்களுக்கு பிறகு இன்று பொதுமக்கள்ஆற்றின் கரையோரம் சென்று குளித்தனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-7, சேரன் மகாதேவி-6, கடனாநதி-5, சேர்வலாறு-4, கருப்பாநதி-3, மூலக்கரைப்பட்டி-3, களக்காடு-1.6, நாங்குநேரி-1.5, பாளை-1.2, மணிமுத்தாறு-1.

    Next Story
    ×