search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோக்கரை கத்தியால் குத்திய காட்சி
    X
    புரோக்கரை கத்தியால் குத்திய காட்சி

    கடன் கிடைக்காத ஆத்திரத்தில் புரோக்கர், வங்கி மேலாளரை கத்தியால் குத்தியவர் கைது

    கோவையில் கடன் கிடைக்காத ஆத்திரத்தில் புரோக்கரை துப்பாக்கியால் மிரட்டி, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை அருகே உள்ள சோமையம் பாளையத்தை சேர்ந்தவர் வெற்றி வேலன் (44).

    இவர் ஒண்டிப்புதூரில் உதிரிபாக விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக கோவை - திருச்சி சாலையில் உள்ள கனரா வங்கியில் ரூ. 1 கோடி கடன் கேட்டு அதற்கான ஆவணங்களையும் அளித்தார்.

    அப்போது கோவை டாடாபாத்தை சேர்ந்த புரோக்கர் குணபாலன் என்பவர் வெற்றி வேலனுக்கு அறிமுகம் ஆனார். அவர் தான் வங்கிக்கு நன்கு பழக்கம் எனவும் உங்களுக்கு ரூ. 1 கோடி கடன் வாங்கி தருகிறேன்.

    இதற்கு கமி‌ஷனாக ரூ. 6 லட்சம் தர வேண்டும் எனவும் குணபாலன் கேட்டு உள்ளார். இதற்கு சம்மதித்த வெற்றி வேலன் முதல் தவணையாக ரூ. 3 லட்சத்தை குணபாலனிடம் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் வங்கியில் வெற்றி வேலன் கொடுத்த ஆவணங்கள் திரும்பி வந்தது. அவருக்கு கடன் கொடுக்க முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து வெற்றி வேலன் வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது நீங்கள் வேறு ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி உள்ளீர்கள். அதனை முறையாக செலுத்தவில்லை. எனவே உங்களுக்கு கடன் தர முடியாது என தெரிவித்து உள்ளனர்.

    இதனால் வெற்றி வேலன் ஆத்திரத்தில் இருந்தார். கடன் வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சத்தை ஏமாற்றிய குணபாலன் மீதும் ஆத்திரம் இருந்தது.

    நேற்று புரோக்கர் குணபாலன் கனரா வங்கியில் இருப்பதாக வெற்றி வேலனுக்கு தகவல் கிடைத்தது. அவர் தனக்கு சொந்தமான ஏர்கன் துப்பாக்கியை எடுத்து கொண்டு கனரா வங்கி சென்றார்.

    அப்போது புரோக்கர் குணபாலன் கனரா வங்கி மேலாளர் சந்திரசேகருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த வெற்றி வேலன் புரோக்கர் குணபாலன் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு கொன்று விடுவதாக மிரட்டினார்.

    இதனை பார்த்த வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வெற்றி வேலனை தடுத்தனர். அப்போது துப்பாக்கி கீழே விழுந்தது.

    ஆனாலும் ஆத்திரத்தில் இருந்த வெற்றி வேலன் வங்கி மேலாளர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்.இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் வங்கியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று வெற்றிவேலனை மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த ஏர் கன் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட வெற்றி வேலன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    புரோக்கர் மற்றும் வங்கி மேலாளரை வெற்றி வேலன் மிரட்டும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    Next Story
    ×