search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகம்
    X
    அம்மா உணவகம்

    அம்மா உணவகங்களில் ரூ.484 கோடி இழப்பு

    அம்மா உணவகம் நடத்துவதால் இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.484 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த உணவகங்களுக்கான செலவு தொகை சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் உணவு சாப்பிடுவதற்காக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 2012-ம் ஆண்டு அம்மா உணவகம் அமைக்கும் திட்டத்தை தொடங்கினார். சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.669 கோடி செலவில் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.

    அரசின் உதவியுடன் செயல்படும் இந்த உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை கிடைத்த வருமானம் ரூ.185 கோடி மட்டுமே.

    ஆனால் உணவுப் பொருட்களின் விலை, தொழிலாளர் சம்பளம் போன்றவை மிகவும் அதிகமாக உள்ளன. ஆரம்ப காலத்தில் அம்மா உணவகத்தில் சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எனவே, அதிக அளவில் நஷ்டம் ஏற்படவில்லை.

    சமீப காலமாக அம்மா உணவகத்தில் உணவு உண்போர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இதுவரை அம்மா உணவகம் நடத்துவதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.484 கோடியாக அதிகரித்துள்ளது.

    இந்த உணவகங்களுக்கான செலவு தொகை சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படுகிறது. எனவே அம்மா உணவகம் நடத்துவதால் ஏற்படும் இழப்பை சமாளிக்கவும் வருமானத்தை பெருக்கவும் சென்னை மாநகராட்சி அரசின் ஆலோசனையுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் ஒரு பகுதியில் ஏடி.எம். மையங்களை வைக்க அனுமதி வழங்குவது, ஆவின் பாலகம் அமைப்பது இவற்றின் மூலம் வாடகை பெற்று வருமானத்தை அதிகரிப்பது என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வங்கிகள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது.

    தனித்தனியாக அல்லாமல், பல அம்மா உணவகங்களுக்கு பொதுவான சமையல் கூடம் அமைப்பதன் மூலம் அதிக செலவை குறைக்கலாம். அதிக அளவு விற்பனை ஆகாத அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் இந்த உணவகங்களை கண்காணிக்கவும், செலவுகளை கட்டுப்படுத்தவும், சுகாதாரமான முறையில் காய்கறிகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
    Next Story
    ×