search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜக்கி வாசுதேவ்
    X
    ஜக்கி வாசுதேவ்

    விலை உயர்வால் வெங்காயத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம்- ஜக்கி வாசுதேவ்

    விலை உயர்வால் வெங்காயத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என்றும், பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கும் விவசாயிகள் லாபம் பார்க்கட்டும் எனவும் ஜக்கி வாசுதேவ் பேசினார்.
    கோவை:

    ‘ஈஷா அவுட்ரீச்சின்’ வழிகாட்டுதலில் இயங்கும் ‘வெள்ளியங்கிரி உழவன்’ உற்பத்தியாளர் நிறுவனத்தின் 6-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.

    இதில் அந்த நிறுவனத்தின் தலைவர் குமார், இயக்குனர்கள், தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் செல்லமுத்து, கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லுசாமி, நல்லறம் பவுண்டேசன் தலைவர் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் விவசாயிகள் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு 1 லட்சம் மரக்கன்றுகளை தாங்களே உற்பத்தி செய்து தருவதாக ஜக்கி வாசுதேவிடம் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:-

    நம் நாட்டில் விவசாயமும், விவசாயிகளும் மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறார்கள். இந்த சூழலிலும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இது போதாது. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஆரம்பிக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கங்கள் செய்ய வேண்டும். தற்போது வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டதால் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். இதனால் விவசாயிகள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

    பல வருடங்களாக போதிய விலை கிடைக்காமல் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகள் ஒரு ஆண்டில் நல்ல லாபம் பார்த்துவிட்டு போகட்டுமே!

    வெங்காயத்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அரசு செய்ய வேண்டும். நம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க சில சட்டங்கள் இயற்றினார்கள். ஆனால், அந்த நிலை இப்போது மாறிவிட்டது. ஆனால், இன்னும் அந்த சட்டங்களை அமலில் வைத்து இருக்கிறார்கள்.

    மற்ற துறையினர்களுக்கு இருப்பது போன்ற அனைத்து உரிமைகளும், அதிகாரங்களும் விவசாயிகளுக்கும் இருக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

    இது மன்னராட்சி காலம் கிடையாது. ஜனநாயகம். இப்போது மக்கள் தான் நாயகர்கள். விவசாயிகள் உங்களுக்கு என்ன உதவிகள் தேவை என தீர்மானித்து அரசாங்கங்களுக்கு கடிதம் எழுதுங்கள். 10,000 விவசாயிகள் கடிதம் எழுதினால் அரசாங்கங்களால் எப்படி எதுவும் செய்யாமல் இருக்க முடியும்.

    கர்நாடக வனத்துறை அடுத்த ஆண்டு 73 லட்சம் மரக்கன்றுகளை வழங்க சம்மதித்துள்ளது. அதேபோல், அதற்கடுத்த 2 ஆண்டுகளில் முறையே 2 கோடி மரக்கன்றுகளும், 8 கோடி மரக்கன்றுகளும் உற்பத்தி செய்து தர சம்மதித்துள்ளது. இதேபோல் தமிழக வனத்துறையுடனும் மரக்கன்றுகள் வழங்குமாறு கோரிக்கை வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×