search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை நிலவரம்
    X
    மழை நிலவரம்

    தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    இலங்கைக்கு கிழக்கே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வடமேற்கு பருவமழை தொடங்கிய பிறகு, தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வடமாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் வறட்சியை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னை, அதன் சுற்றுப்புற பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

    சென்னையில் திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், வேளச்சேரி, வடபழனி, விமான நிலையம், தியாகராயநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவில் இருந்து மழை பெய்தது. இன்று காலை வரை இந்த மழை நீடித்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    காஞ்சிபுரத்தில் நேற்று மாலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில், இரவு 12 மணி முதல் 3 மணி வரை பலத்த மழையாக கொட்டியது.

    இதன் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதேபோல் நகரின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, காந்தி சாலை, கங்கைகொண்டான் மண்டபம், மேட்டுத்தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 14 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக தாம்பரம் பகுதி முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீரால் மூழ்கி கிடக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சேலையூர், வேளச்சேரி சாலையில் மழை நீர் ஆறுபோல் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இரும்புலியூர் மதுரவாயல் பைபாஸ் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் வெள்ளக்காடாக தேங்கி நிற்கிறது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சிபுரம் - 32.20
    ஸ்ரீபெரும்புதூர் - 89.20
    உத்திரமேரூர் - 28.00
    வாலாஜாபாத் - 11.00
    திருப்போரூர் - 14.40
    செங்கல்பட்டு - 17.00
    திருக்கழுக்குன்றம் - 8.40
    மாமல்லபுரம் - 9.40
    மதுராந்தகம் - 4.00
    செய்யூர் - 11.00
    தாம்பரம் - 146.20

    இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ளது.

    மழை

    வருகிற 30-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை 5 நாட்கள் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. 2-ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், நாகை, திருவாரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களிலும், தென் கடலோர பகுதிகளிலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இன்று நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வு டிசம்பர் மாதம் 3-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×