search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகள் சங்கீதாவுடன் தாய் ஜான்சிராணி (பழைய படம்)
    X
    மகள் சங்கீதாவுடன் தாய் ஜான்சிராணி (பழைய படம்)

    நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தாய் கோரிக்கை

    நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நவலூர் குட்டப்பட்டு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அர்ஜூணன்-ஜான்சிராணி தம்பதியின் 3-வது மகள் சங்கீதா.

    இவரது மூத்த சகோதரி விஜி மஞ்சள் காமாலை நோயினால் கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பமே சோகத்தில் இருந்தது. உறவினர்கள் பலர் ஆறுதல் கூறியும் சகோதரியை இழந்த தவிப்பு சங்கீதாவை பெரிதும் பாதித்தது.

    தொடர்ந்து மன உளைச்சல் அடைந்த சங்கீதா பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் 2010-ம் ஆண்டு தியான வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அங்கேயே தங்கி பணியாற்றினார். முதலில் சங்கீதாவின் பெற்றோர் அதனை ஏற்க மறுத்தாலும் மகளின் மன நிம்மதிக்காக சம்மதித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி சங்கீதா மர்மமான முறையில் நித்யானந்தா ஆசிரமத்தில் உயிரிழந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறித்துடித்தனர். சங்கீதாவை ஆசிரமத்தில் துன்புறுத்தி, கொலை செய்து விட்டதாக பெங்களூரு ராம் நகர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    இதற்கிடையே சங்கீதாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி நவலூர் குட்டப்பட்டில் அடக்கம் செய்யப்பட்ட சங்கீதா உடல் 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சங்கீதா இறப்பையடுத்து மன உளைச்சலடைந்த அவரது தந்தையும் உயிரிழந்தார்.

    சங்கீதா இறப்பு குறித்த வழக்கு விசாரணை பெங்களூரு ஐகோர்ட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கை பெங்களூரு போலீஸ் சரியாக விசாரணை நடத்தவில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சங்கீதாவின் தாய் ஜான்சிராணி கோரிக்கை விடுத்துள்ளார்.

    நித்யானந்தா

    மேலும் நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள பலரும் மிரட்டி துன்புறுத்தப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள்ள பெண்கள், குழந்தைகள் அனைவரையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை அழைத்து வரவேண்டும் என்றார்.

    பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா தனது 4 மகள்களை அங்குள்ள நித்யானந்தா கல்வி நிலையத்தில் சேர்த்து இருந்தார். அவர்களை அகமதாபாத்திற்கு கடத்தி சென்று சித்ரவதை செய்வதாக புகார் தெரிவித்து இருந்தார். அதில் 2 பேர் மீட்கப்பட்டனர். லோபமுத்ரா, நந்திதா ஆகியோரை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் தனது மகள் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த ஜான்சிராணி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×